அரசு நிலத்தில் முறைகேடாக கல்குவாரி: குறைதீர் கூட்டத்தில் முறையீடு
திண்டுக்கல்: அரசு புறம்போக்கு நிலத்தில் முறைகேடாக அமைக்கப்பட்ட கல்குவாரிகள் குறித்து கலெக்டர் அலுவலகத்தில் நடந்த மக்கள் குறைதீர் கூட்டத்தில் முறையிடப்பட்டது. டி.ஆர்.ஓ., ஜெயபாரதி தலைமையில் நடந்த இக்கூட்டத்தில் 210 மனுக்கள் பெறப்பட்டன. கோரிக்கை மனுக்கள் சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் வழங்கி தகுதியான மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தப்பட்டது. கலெக்டர் நேர்முக உதவியாளர்கள் கீர்த்தனா மணி, சுந்தரமகாலிங்கம், செல்வன், மாவட்ட வழங்கல் அலுவலர் அன்பழகன், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் ,சிறுபான்மையினர் நல அலுவலர் சுகுமார் கலந்துகொண்டனர். ஜல்லிக்கட்டு பாதுகாப்பு நலச்சங்க மாவட்ட தலைவர் சின்னையா தலைமையில் திண்டுக்கல்லை அடுத்த பில்லமநாயக்கன்பட்டியை சேர்ந்த மாடுபிடி வீரர்கள், காளை வளர்ப்பவர்கள் அளித்த மனுவில், மாவட்டத்தில் ஜல்லிக்கட்டு நடத்தப்படும் போது காளைகளின் உரிமையாளர்களுக்கும், மாடு பிடி வீரர்களுக்கும் ஆன்லைன் மூலம் டோக்கன் வழங்கும் நடைமுறையை ரத்து செய்ய வேண்டும். ஜல்லிக்கட்டு நடத்துபவர்களிடம் இருந்து அரசு சார்பில் பெறப்படும் உறுதிமொழி பத்திரத்தை ரத்து செய்துவிட்டு காளைகளின் உரிமையாளர்கள் ,மாடுபிடி வீரர்களுக்கு நலவாரியம் அமைக்க வேண்டும் என கேட்டிருந்தனர். நத்தம் தாலுகா சிறுகுடி கிராம மக்கள் கொடுத்த மனுவில், அரசு புறம்போக்கு நிலத்தில் முறைகேடாக அமைக்கப்பட்ட கல்குவாரிகள் பிரச்னையில் தொடர்புடையவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டிருந்தனர். பன்றிமலையை அடுத்த அமைதிசோலை கிராம மக்கள் சார்பில் கொடுத்த மனுவில், 65 ஆண்டுகளாக முறையான வீட்டு வசதி இன்றி தவிக்கிறோம். இலவச வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும் என கேட்டிருந்தனர்.