பழநியில் பா.ஜ., மகளிர் அணியினர் மறியல் : கைது
பழநி: மதுரையில் நடந்த பா.ஜ ., நீதி கேட்பு ஊர்வலம் நிகழ்ச்சிக்கு சென்ற பழநி மகளிர் அணியினரை போலீசார் கைது செய்தனர்.சென்னை அண்ணா பல்கலை மாணவி பாலியல் வன்முறையில் பாதிக்கப்பட்டதை கண்டிக்கும் வகையில் மதுரையிலிருந்து சென்னை வரை ஊர்வலமாக செல்ல பாஜ., மாநில தலைவர் அண்ணாமலை அறிவிப்பு வெளியிட்டிருந்தார். அதில் பங்கேற்க பழநியில் இருந்து வேன் மூலம் பா.ஜ., மகளிர் அணி தலைவி லீலாவதி தலைமையில் 15 நிர்வாகிகள் சென்றனர். அவர்களை ரணகாளியம்மன் கோயில் அருகே வழிமறித்த பழநி டவுன் போலீசார் கைது செய்தனர். இவர்களை திண்டுக்கல் ரோட்டில் உள்ள தனியார் மண்டபத்தில் வைத்திருந்தனர்.இவர்களை பா.ஜ., திண்டுக்கல் மேற்கு மாவட்ட தலைவர் கனகராஜ் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: அண்ணா பல்கலை பாதிப்பு மாணவிக்கு நீதி கேட்டு பழநியில் இருந்து சென்ற மகளிர் அணி தலைவி லீலாவதி தலைமையிலான நிர்வாகிகளை கைது செய்த போலீசாரின் செயலை பா.ஜ., சார்பில் கண்டிக்கின்றோம். பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு நீதி கேட்டு போராட முடியாத நிலை தமிழகத்தில் உள்ளது. சட்டம் ஒழுங்கு முதல்வரின் நேரடி கட்டுப்பாட்டில் உள்ளது என்கிறார்கள். 15 மகளிர் அணியினரை தீவிரவாதிகள் போல் போலீஸ் இன்ஸ்பெக்டர் தலைமையில் 50 போலீசார் பாதுகாப்பில் அடைக்கப்பட்டுள்ளனர். மண்டபத்தின் அருகே உள்ள மதுபான பார் செயல்பட்டு வருகிறது. இதை தடுக்க முடியவில்லை என்றார்.தொடர்ந்து பா.ஜ.,வினர் பொதுச் செயலாளர் செந்தில் தலைமையில் மண்டபத்தின் முன்புள்ள திண்டுக்கல் சாலையில் மறியலில் ஈடுபட்டனர். அவர்களையும் போலீசார் அவர்களை கைது செய்தனர்.வடமதுரை : சென்னை அண்ணா பல்கலை மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவத்தை கண்டித்து மதுரையில் நடந்த பா.ஜ., பேரணியில் பங்கேற்க திண்டுக்கல் மேற்கு மாவட்ட மகளிரணி தலைவர் லீலாவதி தலைமையில் கட்சியினர் பழநியில் இருந்து புறப்பட்டனர். இவர்களை பழநியிலேயே போலீசார் மடக்கி கைது செய்து மாலை வரை விடுவிக்கவில்லை. இதை கண்டித்து வடமதுரையில் ஒன்றிய தலைவர்கள் வீரப்பன், நாகராஜன் தலைமையில் கட்சி நிர்வாகிகள் 20 பேர் ரோடு மறியல் போராட்டம் செய்தனர். வடமதுரை போலீசார் இவர்களை கைது செய்தனர்.