ஆடிட்டர் அலுவலகத்தில் ரூ.1.50 கோடி கையாடல் பெண் உதவியாளர், குடும்பத்தினர் மீது வழக்கு
திண்டுக்கல்: திண்டுக்கல்லில் ஆடிட்டர் ஹிதாயத்துல்லா அலுவலகத்தில் வருமான வரி, ஜி.எஸ்.டி., தாக்கல் என வாடிக்கையாளர்களிடமிருந்து பணம் பெற்று வரவு வைக்காமல் ரூ.1.50 கோடி கையாடல் செய்த பெண் உதவியாளர் அனிஷா டெய்சி 30, குடும்பத்தினர் மீது குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். திண்டுக்கல் ஆர்.எம்.காலனியில் ஆடிட்டர் ஹிதாயத்துல்லா அலுவலகம் செயல்படுகிறது. அலுவலக உதவியாளராக மங்களபுரம் பகுதியைச் சேர்ந்த அனிஷா டெய்சி பணிபுரிந்தார். வருமானம், தொழில், தொழிற்சாலைகளுக்கு ஜி.எஸ்.டி., வரி தாக்கல் செய்வது, புதிய கணக்குகள் துவங்குவது, வாடிக்கையாளர் நிறுவனங்களுக்கு வருடாந்திர கணக்கு தணிக்கை செய்தல் உள்ளிட்ட பணிகளை கவனித்தார். 2021 முதல் 2024 வரை காலத்தில் அலுவலகத்துக்கு வந்த வாடிக்கையாளர்களிடம் வரி தாக்கல் செய்ய பணம் பெற்றுக்கொண்ட அனிஷா டெய்சி அலுவலக கணக்கில் வரவு வைக்காமல் கணவர் விவேக்நாத் 33, தந்தை மரிய பிரான்சிஸ் சேவியர், தாய் எமல்டா மேரி, முள்ளிப்பள்ளம் வேளாண் உதவி அலுவலராக பணிபுரியும் தங்கை விக்டோரியா செலஸ் ஆகியோரது வங்கிக்கணக்கில் வரவு வைத்தார். ஆடிட்டர் வரவு, செலவுகளை தணிக்கை செய்த போது 2021 முதல் 2024 வரை நடந்த பணபரிவர்த்தனைகள் அலுவலக வங்கிக்கணக்கில் வரவு வைக்காமல் ரூ.ஒரு கோடியே 55 லட்சத்து 200 ஐ அனிஷா டெய்சி கையாடல் செய்தது தெரிய வந்தது. எஸ்.பி., பிரதீப்பிடம் ஆடிட்டர் புகார் செய்தார். அவரது உத்தரவின்படி குற்றப்பிரிவு டி.எஸ்.பி., குமரேசன், இன்ஸ்பெக்டர் முத்துலட்சுமி விசாரணையில் கையாடல் பணத்தில் அனிஷா டெய்சி, அவரின் குடும்பத்தார் வீடு, நிலம் வாங்கி சொகுசாக வாழ்ந்தது தெரிந்தது. இதுதொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணைக்கு ஆஜராக சம்மன் கொடுத்த நிலையில் அனைவரும் தலைமறைவாகினர். அவர்களை போலீசர் தேடி வருகின்றனர்.