உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / பழநி போராட்ட விவகாரத்தில் கம்யூ., நாடகம்; பா.ஜ., விமர்சனம்

பழநி போராட்ட விவகாரத்தில் கம்யூ., நாடகம்; பா.ஜ., விமர்சனம்

திண்டுக்கல்: பழநி அடிவார சாலையோர வியாபாரிகளை காக்கிறோம் என்ற பெயரில் கம்யூனிஸ்ட்கள் நாடகம் ஆடுவதாக பா.ஜ., விமர்சித்ததோடு கண்டனம் தெரிவித்துள்ளது.பழநி முருகன் கோயில் அடிவாரத்தில் நீதிமன்ற உத்தரவின் காரணமாக கிரிவீதி ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றப்பட்டுள்ளன. வாகனங்கள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளன. இதனால் சாலையோர வியாபாரிகளின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி உள்ளது. சுற்றுலா பஸ் ஸ்டாண்ட் வளாகத்தில் மாற்று இடம் வழங்க வேண்டும், இதுதொடர்பாக அமைச்சர்கள் முன்னிலையில் தலைமை செயலககத்தில் நடந்த கூட்டத்தின் முடிவுகளை உடனடியாக செயல்படுத்த வேண்டுமென வலியுறுத்தி சி.ஐ.டி.யூ., சாலையோர சிறுவிற்பனையாளர்கள் சங்கத்தினர் 2 தினங்களுக்கு முன் ஆர்.டி.ஓ., அலுவலகம் முன்பு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதை தொடர்ந்து தி.மு.க., கம்யூனிஸ்ட்கள் மக்களை ஏமாற்றுவதாக பா.ஜ., விமர்சித்துள்ளது.பா.ஜ., மாவட்ட தலைவர் கனகராஜ்: பழநி எம்.எல்.ஏ.,யாக இருப்பவர் தி.மு.க., எம்.பி., யாக இருப்பவர் மார்க்சிஸ்ட், நகராட்சி தலைவர், துணைத் தலைவராக இருப்பவர்கள் இந்த இரு கட்சியை சேர்ந்தவர்கள்தான். இதுமட்டுமின்றி திண்டுக்கல் மாவட்டத்திற்கு 2 அமைச்சர்கள் வேறு உள்ளனர். ஆக்கிரமிப்பு அகற்றியது முதல் எதற்குமே வியாபாரிகளுடன் துணை நிற்காத தி.மு.க., கம்யூனிஸ்ட்கள் தேர்தல் வரப்போகிறது என்பதால் போராட்டம் என நாடகம் ஆடுகின்றனர். கோயில் நிர்வாகமே அரசின் கட்டுப்பாட்டில் தான் இருக்கிறது. யாரை ஏமாற்ற இது போன்ற போராட்டங்களை நடத்துகின்றனர் என தெரியவில்லை. இவர்களை யாரும் கோயில் நிர்வாகம் மதிக்கவில்லையா என தெரியவில்லை. இவர்கள் அதிகாரிகளை குறிவைத்து போராட்டத்தை நடத்துகின்றனரே தவிர ஆட்சியாளர்களை கேள்வி கேட்பதில்லை. இதனை பா.ஜ., வன்மையாக கண்டிக்கிறது என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை