உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / தீபாவளி போனஸ் வழங்குவதில் தாமதம்; நெசவாளர்கள் விரக்தி

தீபாவளி போனஸ் வழங்குவதில் தாமதம்; நெசவாளர்கள் விரக்தி

சின்னாளபட்டி, : கூட்டுறவு சங்க நிர்வாக குளறுபடிகளால் சின்னாளபட்டி நெசவாளர்களுக்கு தீபாவளி போனஸ் கிடைப்பதில் தாமதம் நீடிக்கிறது. இதனால் செலவினங்களை எதிர்கொள்ள முடியாமல் விரக்தியில் உள்ளனர்.சின்னாளபட்டியில் 20க்கு மேற்பட்ட கூட்டுறவு நெசவாளர் கூட்டுறவு சங்கங்கள் செயல்பட்டு வந்தன. சங்க நிர்வாக முறைகேடுகள், அரசியல் பிரமுகர்களின் நெருக்கடி போன்ற நடைமுறை பிரச்னைகளால் சங்க செயல்பாடுகள் பாதிக்க இவற்றில் பல மூடப்பட்டு விட்டன. தற்போது அண்ணா, காந்திஜி, அமரர் சஞ்சய் காந்தி உட்பட 8 சங்கங்கள் மட்டுமே உள்ளன. ஆண்டுதோறும் தீபாவளி பண்டிகையின்போது கூட்டுறவு சங்க நெசவாளர்களுக்கு 6 முதல் 8 சதவீதம் போனஸ் வழங்கப்படும். தீபாவளி பண்டிகைக்கு சில நாட்களாக உள்ள நிலையில் இந்தாண்டும் போனஸ் வழங்கலில் தாமதம் நீடிப்பதால் விரக்தியில் உள்ளனர்.நெசவாளர்கள் கூறியதாவது: கட்சி நிர்வாகிகள் வசூல் வேட்டையால் சங்கங்கள் சுரண்டப்படுகின்றன. தனியாரிடமிருந்து வாங்கும் சேலைகளை கைத்தறி நெசவாளர்கள் , கூட்டுறவு சங்க உறுப்பினர்களின் தயாரிப்பு போன்ற கணக்கு காண்பித்து முறைகேடுகளில் ஈடுபடுகின்றனர். மறு தணிக்கை, பல சங்கங்களில் மகாசபை கூட்டங்கள் நடத்தப்படாதது போன்ற காரணங்களை கூறி நெசவாளர்களுக்கான போனஸ் உள்ளிட்ட பலன்களை வழங்கலில் குளறுபடிகள் அரங்கேறுகிறது. நெசவாளர்கள் தீபாவளியை இனிப்புகள் கூட வாங்கிக் கொண்டாட முடியாத அவல நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். சங்க நெசவாளர்களுக்கு முழுமையான போனஸ் கிடைக்க கைத்தறி துறை நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ