உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / பழநியில் அமையுமா யாத்ரி நிவாஸ் எதிர்பார்ப்பில் பக்தர்கள்

பழநியில் அமையுமா யாத்ரி நிவாஸ் எதிர்பார்ப்பில் பக்தர்கள்

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் பழநியில் தைப்பூசம் உள்ளிட்ட திருவிழாக்காலங்களில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கூடுவதால் தங்க விடுதிகள் இன்றி சிரமப்படுகின்றனர். பக்தர்களின் இப்பிரச்னைக்கு தீர்வு காண ஹிந்து அறநிலையத்துறை சார்பில் யாத்ரி நிவாஸ் விடுதி அமைக்க வேண்டும் என்ற பக்தர்கள் எதிர்பார்க்கின்றனர்.தமிழகத்தில் அதிக பக்தர்கள் வருவதில் முதன்மையானது பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயில். நீண்ட தூரத்தில் இருந்து வரும் பக்தர்கள் பழநியில் தங்கி தரிசனம் செய்ய ஏதுவாக போதிய விடுதிகள் இல்லை. தேவஸ்தான நிர்வாகம் சார்பில் சில விடுதிகள் இருந்தாலும் விழாக்காலங்களில் இவற்றில் தங்க குறைந்தளவு பக்தர்களுக்கே இடம் கிடைக்கிறது. இதனால் பக்தர்கள் கிடைக்கும் இடங்களில் பாதுகாப்பற்ற நிலையில் இரவில் தங்குகின்றனர். இதை பயன்படுத்தி தனியார் விடுதி நிர்வாகங்கள் கூடுதல் கட்டணம் நிர்ணயிக்கின்றனர்.பழநி கோயிலுக்கு சொந்தமான நிலங்கள் காலியிடங்களாக உள்ளன. புறநகர் பகுதிகளில் அரசு புறம்போக்கு நிலங்கள் உள்ளன. இவற்றில் ஒரு இடத்தை தேர்வு செய்து யாத்ரி நிவாஸ் விடுதி கட்டினால் பக்தர்கள் தங்க ஏதுவாக இருக்கும்.அ.தி.மு.க., ஆட்சியின் போது திருச்சி ஸ்ரீரங்கத்தில் பக்தர்கள் தங்க ஏதுவாக பல அறைகள் கொண்ட யாத்ரி நிவாஸ் விடுதி கட்டப்பட்டது. எந்த சிபாரிசுக்கு இடமின்றி ஆன்லைன் பதிவு மூலம் அறைகள் முன்பதிவு செய்யப்படுகிறது. கட்டணமும் குறைவு. இரண்டு பேர் தங்கும் அறை, குழுவாக வருபவர்களுக்கென ஐந்து, பத்து பேர் தங்கும் பெரிய அறை என பல்வேறு கட்டணங்களில் யாத்ரி நிவாஸ் செயல்படுகிறது. இதேபோல் பக்தர்கள் நலனை கருத்தில் கொண்டு பழநியிலும் யாத்ரி நிவாஸ் கட்ட ஹிந்து அறநிலையத்துறையினர் முன்வரவேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி