கொடை மருந்து கடைகளுக்கு வனத்துறை நோட்டீஸ்
கொடைக்கானல்: கொடைக்கானல் வெங்கலவயல் பகுதியில் காட்டு யானை பலியான நிலையில் உடற்கூறு பரிசோதனையில் போரட் காலிப்பை இருந்தது தெரிந்தது. வனத்துறை உரம் ,பூச்சி மருந்து விற்கும் கடைகளுக்கு எச்சரிக்கையை நோட்டீஸ் வழங்கியது.கொடைக்கானல் பகுதியில் யானை, காட்டுமாடு, மான் உள்ளிட்ட வன உயிரினங்கள் நடமாட்டம் பரவலாக உள்ளது. பெருமாள்மலை பிரிவுக்குட்பட்ட பேத்துப்பாறை விவசாய நிலங்களில் ஆய்வு மேற்கொண்ட போது பூச்சிக்கொல்லி மருந்தின் காலி பைகள் முறையாக அப்புறப்படுத்தாமல் ஆங்காங்கே விவசாய நிலத்தில் இருந்தது தெரிந்தது. அரசு நெறிமுறைகளின் படி விவசாய நிலங்களில் பூச்சி மருந்துகளை பயன்படுத்திய பின் காலி பைகளை முறையாக அப்புறப்படுத்த விவசாயிகளுக்கு சம்பந்தப்பட்ட உரம் பூச்சிக்கொல்லி மருந்து விற்கும் நிறுவனங்கள் அறிவுறுத்த வேண்டும். பூச்சிக்கொல்லி மருந்துகளை முறையாக அப்புறப்படுத்தாத நிலையில் நீரோடைகளில் கலந்து மனித, வன உயிரினங்களுக்கு பாதிப்பை ஏற்படுத்துகிறது. பூச்சிக்கொல்லி மருந்துகளால் வன உயிரினங்களுக்கு உயிரிழப்பு ஏற்படும் பட்சத்தில் சம்பந்தப்பட்ட நிறுவனங்களின் மீது வன உயிரின பாதுகாப்பு சட்டம் மூலம் நடவடிக்கை எடுக்கப்படும் என கொடைக்கானல் ரேஞ்சர் சுரேஷ்குமார் எச்சரிக்கை கடிதத்தில் தெரிவித்தார்.