உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / தொண்டு நிறுவனம் பெயரில் ரூ.பல கோடி மோசடி

தொண்டு நிறுவனம் பெயரில் ரூ.பல கோடி மோசடி

திண்டுக்கல்:தொண்டு நிறுவன பெயரில் டிபாசிட் பெற்று பல கோடி ரூபாய் மோசடி செய்த கணவன், மனைவியை திண்டுக்கல் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.திண்டுக்கல்லை சேர்ந்தவர் மதன் பிரசாத். சுயதொழில் செய்து வருகிறார். இவருக்கு பழநியில் ஸ்ரீநேசா பெயரில் தொண்டு நிறுவனம் நடத்தி வந்த கோவையைச்சேர்ந்த செந்தில்குமார் அறிமுகமானார். இதுபோல் நிறுவன பங்குதாரர்களான செந்தில்குமாரின் மனைவி ஜெயந்தி, மைத்துனர் சக்திவேல் ஆகியோரும் அறிமுகமாகினர். அப்போது அவர்கள் , 'தொண்டு நிறுவனத்தில் டிபாசிட் செலுத்துபவர்களுக்கு 2 சதவீதம் வட்டி மாதந்தோறும் வழங்குகிறோம்.ரூ.5 லட்சத்துக்கு மேல் டிபாசிட் செலுத்துபவர்களுக்கு வட்டியுடன் ஊக்கத்திற்காக தங்க நாணயமும் கொடுக்கிறோம்' என ஆசை வார்த்தை கூறினர்.இதை நம்பிய மதன் பிரசாத் தனது பெயர், மனைவி பெயரில் ரூ.11 லட்சம் செலுத்தினார். இதுபோல் சென்னை, காஞ்சிபுரம், திருச்சி, மதுரை, கோவை, திருப்பூர், திண்டுக்கல் உட்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் ஏஜன்ட்கள் மூலம் கோடிக்கணக்கான ரூபாயை டிபாசிட் பெற்றுள்ளனர். தொடர்ந்து ஆறு மாதங்கள் வட்டிப்பணம் கொடுக்க அதன்பின் தரவில்லை. முதலீடு செய்தவர்கள் பணம் கேட்க பழநியில் செயல்பட்ட தொண்டு நிறுவனம் மூடப்பட்டதோடு செந்தில்குமார் உட்பட மூவரும் தலைமறைவாயினர். அலைபேசி சுவிட் ஆப் செய்யப்பட்டிருந்தது. பாதிக்கப்பட்டவர்கள் திண்டுக்கல் எஸ்.பி.,யிடம் புகார் அளித்தனர். நடவடிக்கை எடுக்க மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவு போலீசாருக்கு அவர் உத்தரவிட்டார். டி.எஸ்.பி., இம்மானுவேல் ராஜ்குமார், இன்ஸ்பெக்டர் அன்னலட்சுமி ஆகியோர் சென்னையில் பதுங்கி இருந்த செந்தில்குமார், மனைவி ஜெயந்தியை கைதுசெய்தனர்.போலீசார் கூறுகையில், 'ஸ்ரீநேசா தொண்டு நிறுவன மோசடியில் பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளிக்கலாம் என கூற இதுவரை ரூ.7 கோடிக்கு மோசடி புகார்கள் வந்துள்ளது. தலைமறைவான சக்தி வேலை தேடி வருகிறோம். கைது செய்யப்பட்டவர்களிடம் நடத்திய விசாரணையில் முதலீடுகளுக்கு சொத்துகள் வாங்கியிருப்பதை கண்டறிந்துள்ளோம். நீதிமன்ற நடவடிக்கைக்கு பின் பறிமுதல் நடவடிக்கை இருக்கும். திண்டுக்கல் சவுராஷ்டிராபுரம், நாகல் நகர் ஏஜன்ட்கள் 4 பேர் மூலமாக மட்டும் ரூ.15.15 கோடி, ஒட்டன்சத்திரத்தில் ரூ.3 கோடி, பழநியில் ரூ.1.50 கோடி, கோவையில் ரூ.4.25 கோடி என ரூ.23.90 கோடி டிபாசிட் செய்யப்பட்டுள்ளது' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ