உதவித்தொகை வந்துள்ளதாக கூறி தோடு, பணத்தை வாங்கி மோசடி
வேடசந்துார்: திண்டுக்கல் மாவட்டம் வேடசந்துாரில் தனியாக வசித்து வரும் மூதாட்டியிடம் அரசின் உதவித்தொகை வந்துள்ளதாக கூறி ரூ. 1500 ஐ பெற்றுக்கொண்டு தோடை கழற்றி வாங்கி சென்ற நபர் குறித்து போலீசார் விசாரிக்கின்றனர். வேடசந்துார் எம்.ஜி.ஆர்., நகர் குளத்துக்கரையில் வசிப்பவர் தி.மு.க., பூத் கமிட்டி உறுப்பினர் ஜமீலா பீவி 75. 15 ஆண்டுகளுக்கு முன்பு கணவர் இறந்த நிலையில் இரு மகன்களும் தனிக்குடித்தனம் சென்றதால் இவர் மட்டும் தனியாக வசித்து வருகிறார். நேற்று மாலை இவரது வீட்டுக்கு வந்த 35 வயது நபர், உங்கள் கணவர் இறந்ததற்கு அரசின் உதவித்தொகை ரூ.20 ஆயிரம், நீங்கள் தனியாக வசித்து வருவதால் அதற்கான உதவித்தொகை ரூ. 17 ஆயிரம் என ரூ.37 ஆயிரம் வந்துள்ளது என கூறி உள்ளார். ரூ.1500 கட்டினால் போதும் என கூறி பணத்தை பெற்று நபர், மூதாட்டி அணிந்திருந்த தோடையும் கழற்றி தர கூறி உள்ளார். தோடை பெற்ற நபர் டூவீலரில் தப்பினார். ஏமாற்றப்பட்டதை அறிந்த மூதாட்டி வேடசந்துார் போலீசில் புகார் செய்தார். அதன்படி போலீசார் விசாரிக் கின்றனர்.