உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / பலன்தராத, வெற்று அறிவிப்பு வேளாண் பட்ஜெட் விவசாயிகள் விளாசல்

பலன்தராத, வெற்று அறிவிப்பு வேளாண் பட்ஜெட் விவசாயிகள் விளாசல்

ஆதாரவிலை அறிவிப்பு இல்லை

--கந்தசாமி, விவசாயி, அப்பியம்பட்டிசீமை கருவேல மரங்களை ராமநாதபுரம் உட்பட சில மாவட்டங்களில் மட்டும் அகற்றப்படும் என்று தெரிவித்துள்ளனர். இதனை அனைத்து மாவட்டங்களுக்கும் விரிவு படுத்த வேண்டும். இதே போல் இயற்கை வேளாண்மையை அனைத்து மாவட்டங்களிலும் செயல்படுத்த வேண்டும். பருத்தி, மக்காச்சோளத்திற்கு ஆதார விலை குறித்த அறிவிப்பு இல்லாதது ஏமாற்றம் அளிக்கிறது. சில காய்கறிகளுக்கு வழங்கும் ஊக்கத்தொகை போல் பருத்தி, மக்காச்சோளத்திற்கும் வழங்க வேண்டும். வேளாண் தொழிலாளர்களுக்கு விபத்து காப்பீடு ரூ.2 லட்சம் அறிவிப்பு வரவேற்கத்தக்கது. 60 வயதுக்கு மேற்பட்ட உழவர் அட்டை வைத்திருக்கும் விவசாயிகளுக்கு மாதம் ரு.1200 ஐ உயர்த்தி இருந்தால் நன்றாக இருக்கும்.

- ஏமாற்றமாக உள்ளது

-எஸ்.கோபாலகிருஷ்ணன், விவசாயி, கொல்லப்பட்டி புதுார்,ஸ்ரீவடமதுரைசிறுதானியங்கள் விஷயத்தில் கவனம் செலுத்த அரசு முன்வந்திருப்பது, 1000 இடங்களில் உழவர் நல சேவை மையம், நத்தம் புளி, ஆயக்குடி கொய்யா, கப்பல்பட்டி முருங்கை போன்றவற்றிற்கு புவி சார் குறியீடு பெற நடவடிக்கை, நிலமற்ற விவசாய தொழிலாளர்களுக்கு விபத்து மரண இழப்பீடு ரூ.2 லட்சமாக உயர்த்தியது, வேளாண் காடுகள் திட்டம் போன்றவை நல்ல திட்டங்களாகும். வறட்சி பகுதியான வேடசந்துார் தொகுதி வளம் பெற நதிநீர் இணைப்பு போன்ற நீண்ட கால நோக்கில் பயன்தரும் திட்டங்களை செயல்படுத்த வேண்டும். சட்டசபை தேர்தலில் பிரதான முழக்கமாக இருந்த வேடசந்துார் தொகுதி குளங்களுக்கு காவிரி உபரி நீரை கொண்டு வரும் திட்டம் இன்னும் செயல்வடிவத்திற்கு வராமல் தள்ளி போவது மிகுந்த ஏமாற்றமாக உள்ளது.

பட்ஜெட் பரவாயில்லை

-பகவதி, விவசாயி, பெரியகோட்டை, திண்டுக்கல்பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ள விஷயங்கள் அனைத்தும் கடைமடை வரை முழுமையாக வந்து சேர வேண்டும். கரும்பு விவசாயிகளுக்கான ஊக்கத்தொகை அதிகரிப்பு வரவேற்கூடியது. கோடை உழவுக்கு மானியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் அதில் சிறு விவசாயி, பெரிய விவசாயி என பார்க்காமல் அனைவருக்கும் வழங்கப்பட வேண்டும் என்பதுதான் விவசாயிகளின் எதிர்பார்ப்பாக இருக்கிறது. குறிப்பாக வேளாண் தோட்டக்கலைத்துறை சார்பில் விவசாயிகளுக்கு இடுபொருட்கள் அதிகளவில் வழங்கப்பட்டாலும் மானியத்தொகை குறைவாக உள்ளது. அதற்கான அறிவிப்புகள் வெளியிட்டிருந்தால் நன்றாக இருந்திருக்கும். மொத்தமாக இந்த பட்ஜெட் பரவாயில்லை என்றுதான் கூற வேண்டும்.

இதயத்திற்கு இதம் அளிக்கிறது

-வி.எம்.வெங்கடேசன், தலைவர், குடகனாறு ஆற்றுப் பாசன விவசாயிகள் சங்கம், செம்பாறைப்பட்டி, வேடசந்துார்இயற்கை விவசாயத்திற்கு முன்னுரிமை கொடுத்து ரூ.12 கோடி நிதி ஒதுக்கீடு, இயற்கை வேளாண்மை திட்டங்களை செயல்படுத்துவதிலும், இயற்கை வேளாண் பொருட்களை சந்தைப்படுத்துவதிலும் கூடுதல் கவனம் செலுத்தியுள்ளது வரவேற்கத்தக்கது. இயற்கை விவசாயத்தில் சிறந்து விளங்கும் மூன்று விவசாயிகளை தேர்வு செய்து நம்மாழ்வார் விருது வழங்கும் என்ற அறிவிப்பு இதயத்திற்கு இதம் அளிக்கிறது. 100 நாள் வேலை திட்ட பணியாளர்களை கொண்டு விவசாயம் செழிக்கும் வகையில் நேரடியாக விவசாய பணிகளில் ஈடுபடுத்தப்படும் என்ற அறிவிப்பு வெளிவரும் என எதிர்பார்த்தோம்.ஏமாற்றமே மிஞ்சியது.

தெளிவான தகவல் இல்லை

-ராமச்சந்திரன்,விவசாயி, கே.எல்லைப்பட்டிஏழை, நடுத்தர விவசாயிகளுக்கு ஏற்ற புதிய திட்டங்கள் சொல்லும்படியாக இல்லை. பாரம்பரிய காய்கறி சாகுபடி, விதை உற்பத்தியை அதிகரிப்பதற்கான திட்டங்கள் இல்லை. குளம், கண்மாய், நீர்தேக்கங்களை மேம்படுத்தி விவசாயத்திற்கு ஏற்ப பயன்படுத்துவதை உறுதி செய்யும் வகையிலான திட்டங்கள் இல்லாதது ஏமாற்றம் அளிக்கிறது.முந்தைய பட்ஜெட்டில் வெளியான பல அறிவிப்புகள் தற்போது வரை செயல்படுத்தப்படவில்லை. மின்சார வசதியற்ற விவசாய நிலங்களுக்கான சோலார் பம்ப்செட் குறித்து தெளிவான தகவல் இல்லை. கரும்பு சாகுபடியில் எதிர்பார்த்த ஊக்கத்தொகை அறிவிக்கப்படவில்லை. உழவர் பாதுகாப்பு திட்டத்தில் உள்ள நடைமுறை பிரச்னைகள் களைவதற்கு எந்த அறிவிப்பும் இடம்பெறவில்லை. தரிசு நிலங்கள் மேம்பாடு குறித்த அறிவிப்புகள் பல ஆண்டுகளாக ஏட்டளவில் மட்டுமே உள்ளன.

ஏற்று கொள்ளத் தக்கது

-சுப்பிரமணியம்,விவசாயி,பழநிநெல் கொள்முதல் மையங்கள் அதிகரித்து நவீனமயம் ஆக்குதல் வரவேற்கத்தக்கது. பட்டதாரி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் வகையில் அமைந்துள்ளது. இலவச மின்சாரம் முறைப்படுத்தப்பட்டுள்ளது ஏற்று கொள்ளத் தக்கது. டெல்டா மாவட்டங்கள் தவிற பிற மாவட்ட நெல் விவசாயிகளுக்கு சிறப்பு திட்டங்கள், வேளாண் பொருள்களுக்கு மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களாக மாற்ற சிறப்பு நிதி உதவி, புவி சார் குறியீடுகள் வழங்கி உள்ளது வரவேற்கதக்கது. கோடை உழவுக்கு ஹெக்டருக்கு ரூ.2000 மானியம் வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது இயற்கை விவசாயம் மேம்படும். நெல்லை அரசு கொள்முதல் செய்வதால் விவசாயிகளுக்கு நல்ல விலை கிடைக்கும்.

நடவடிக்கை எடுங்க

-பி.சக்திவேல், விவசாயி, செடிப்பட்டி-, நத்தம்நான்கு ஆண்டுகளில் ஒரு லட்சத்து 86 லட்சம் மின் இணைப்புகள் அறிவித்துள்ளனர். இது மக்கள் தொகை, விவசாய நிலப்பரப்பிற்கு போதாது. விவசாயத்திற்கு இலவச மின் இணைப்பு வேண்டி ஏராளமானோர் காத்திருக்கின்றனர். விவசாயம் செழிக்க வேண்டும் என்றால் அரசு முதலில் விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்புகளை அதிகரிக்க வேண்டும். அதற்கான அறிவிப்புகள் பட்ஜெட்டில் இல்லாதது பெரும் ஏமாற்றம். தண்ணீர் தட்டுப்பாடு உள்ள பகுதிகளில் மானிய அடிப்படையில் ஆழ்துளை கிணறுகளை அமைக்க அரசு முன்வர வேண்டும். அதேபோல் கோடை காலங்களில் உழவு செய்ய ரூபாய் 2000 மானியம் வழங்கப்படும் என அறிவித்துள்ளனர்.முறையாக விவசாயிகளுக்கு சென்றடைய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஏமாற்றத்தையே அளித்துள்ளது

-விவேகானந்தன், விவசாயி,மன்னவனுார் விவசாயத்திற்கு முக்கியத்துவம் அளிக்கும் அறிவிப்புகள் ஏதும் இல்லாதது ஏமாற்றத்தை அளித்துள்ளது. இதில் வெண்ணெய் பழ சாகுபடிக்கு மட்டும் ரூ.69 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மற்றபடி மலைபயிர்கள் சம்பந்தமாக அறிவிப்புகள் வரவில்லை.விவசாய தேவைக்கு பயன்படும் குளம், கண்மாய் ஆகியவற்றை புதியதாக தோற்றுவிக்கும் அறிவிப்புகள் இல்லை. நுண்ணுயிர் பாசனத்திற்கு ரூ.1168 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. நிலங்களுக்கு தகுந்தார் போல் அவற்றை பிரித்து நிதி ஒதுக்கப்பட வேண்டும். பயிர் காப்பீடு மலைப் பயிர் விவசாயத்திற்கு தேவை என்ற நிலையில் அதுவும் இல்லை. கால்நடைகள் மூலம் இயற்கை விவசாயத்தை மேற்கொள்ள நிதி ஒதுக்கவில்லை. விவசாயத்திற்கு தேவையான கால்நடைகள் வழங்கப்படுவது சம்பந்தமாக அறிவிப்புகளும் இல்லை மலைப்பகுதி விவசாயிகளுக்கு ஏமாற்றத்தையே அளித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி