| ADDED : பிப் 11, 2024 01:23 AM
கள்ளிமந்தையம்: ''முருங்கை விவசாயிகள் பயனடையும் வகையில் முருங்கையை பதப்படுத்த கோடவுன் அமைக்கப்படும் ,'' என அமைச்சர் சக்கரபாணி தெரிவித்தார்.ஒட்டன்சத்திரம் தொகுதி அப்பியம்பட்டி, பருத்தியூர், அப்பனுாத்து, புங்கமுத்துார், வேலம்பட்டி, மேட்டுப்பட்டி, வாகரை, பொருளூர், கொத்தையம் ஊராட்சிகளில் ரூ.15.18 கோடியில் பல்வேறு திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டியும், முடிவற்ற பணிகளை தொடங்கி வைத்த அவர் பேசியதாவது:திண்டுக்கல் உட்பட ஏழு மாவட்டங்களை ஒருங்கிணைத்து முருங்கை மண்டலம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் முருங்கை விவசாயிகள் விளைபொருட்களை பதப்படுத்த கோடவுன் அமைக்கப்பட்டுள்ளது. காவிரி அமராவதி ஆறுகள் இணையும் இடத்தில் மழைக்காலத்தில் வீணாக கடலில் சென்று சேரும் தண்ணீரை பம்பிங் மூலம் திண்டுக்கல் மாவட்டத்திற்கு கொண்டு வந்து இங்குள்ள குளங்களை நிரப்புவதற்கான திட்டப் பணிகளை ஆய்வு மேற்கொள்ள முதலமைச்சர் ரூ.1 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளார். தொப்பம்பட்டியில் ரூ.10 கோடி மதிப்பீட்டில் விளையாட்டு மைதானம் அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கேதையுறம்பு, கள்ளிமந்தையத்தில் விளையாட்டு மைதானம் அமைக்கப் பட உள்ளன, என்றார். திட்ட இயக்குனர் திலகவதி, ஆர்.டி.ஒ., சரவணன், தாசில்தார் முத்துசாமி, ஒன்றிய தலைவர் சத்தியபுவனா, துணைத் தலைவர் தங்கம், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் வேதா, தாஹிரா, ஒன்றிய செயலாளர் தங்கராஜ் கலந்து கொண்டனர்.