உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் /  நத்தத்தில் தகாத வார்த்தைகளால் பேசிய அரசு பள்ளி ஆசிரியர்கள்: மாணவர்கள் மறியல்

 நத்தத்தில் தகாத வார்த்தைகளால் பேசிய அரசு பள்ளி ஆசிரியர்கள்: மாணவர்கள் மறியல்

நத்தம்: மாணவர்களை -ஆசிரியர்கள் தகாத வார்த்தைகளால் பேசியதாக கூறி திண்டுக்கல் மாவட்டம் நத்தம் துரைக்கமலம் அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் மறியல் போராட்டம் நடத்தினர். நத்தம்- கோவில்பட்டியில் துரைக்கமலம் அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளி 12-ம் வகுப்பு அடிப்படை மின்னணு பிரிவில் பயிலும் மாணவர்கள் சிலரை அரசு பள்ளி ஆசிரியர்கள் சிலர்,உடற்கல்வி ஆசிரியர் தகாத வார்த்தைகளால் திட்டி உள்ளனர். கேள்வி கேட்டால் சஸ்பெண்ட் செய்து விடுவோம் என மிரட்டி உள்ளனர். இருந்தும் கேள்வி கேட்ட புதுப்பட்டியை சேர்ந்த மாணவர் ரித்தீஷ்16, 1 மாதம் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். மாணவர்கள் தலைமையாசிரியரிடம் பலமுறை கூறியும் நடவடிக்கை எடுக்காததால் ஆத்திரமடைந்த மாணவர்கள் நத்தம் - மதுரை சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். மாணவர்களை தகாத வார்த்தைகளால் திட்டும் ஆசிரியர்களை சஸ்பெண்ட் செய்ய கோஷம் எழுப்பினர். நத்தம் -இன்ஸ்பெக்டர் சிவராமகிருஷ்ணன், எஸ்.ஐ., அருண்நாராயணன் உள்ளிட்ட போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். தலைமை ஆசிரியரிடம் பேசி தகாத வார்த்தைகளால் பேசிய ஆசிரியர்கள் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்க கோரிக்கை வைக்கப்படும் என கூறியதையடுத்து மாணவர்கள் கலைந்து சென்றனர். பள்ளி தலைமை ஆசிரியர் உமா மகேஸ்வரி கூறியதாவது: 12 ம் வகுப்பு மாணவர் ரித்தீஷ் மதிய உணவு இடைவேளை முடிந்து தாமதமாக வந்ததுடன் வகுப்பறைக்குள் செல்லாமல் வெளியே சுற்றி கொண்டிருந்தார். யூனிக்கோ என்ற ஆசிரியரிடம் மாணவரை கண்டித்து வகுப்பறைக்குள் அனுப்ப நான் கூறினேன். அப்போது அந்த மாணவர் ஆசிரியரை அருவருக்கத்தக்க வார்த்தையில் திட்டினார். ஆசிரியரை திட்டிய மாணவரை தற்காலிகமாக சஸ்பெண்ட் செய்ய உத்தரவிட்டேன். இதனால் அந்த மாணவரின் நண்பர்கள் ஆன சில மாணவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். ஆசிரியர்கள், போலீசார் பேச்சு வார்த்தை பின் வகுப்புக்கு திரும்பினர். மாவட்ட கல்வி அலுவலர் விசாரணை போது ஆசிரியரை தகாத வார்த்தைகளால் திட்டியதை மாணவரே ஒப்புக்கொண்டார் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !