இடி, மின்னலுடன் கொட்டி தீர்த்த கனமழை
திண்டுக்கல்: திண்டுக்கல்லில் நேற்று இடி, மின்னல் , பலத்த காற்றுடன் கொட்டதீர்த்த கனமழையால் ரோடுகளில் மழைநீர் வெள்ளம் போல் ஓடியது.திண்டுக்கல்லில் நேற்று காலை வெயில் அடித்தாலும் மதியத்திற்கு மேல் மேகங்கள் சூழந்தன. மாலை 4:30 மணிக்கு லேசான துாரலுடன் பெய்ய தொடங்கிய மழை கன மழையாக மாறியது. இடை விடாது பெய்த மழை மாலை 6:00 மணிக்கு மேல் இடி, மின்னல், பலத்த காற்றுடன் மிக கன மழையாக மாறியது. இதனால் ரோடுகளில் மழைநீர் வெள்ளம் போல் ஓடியது. நகரின் முக்கிய பகுதிகளில் தண்ணீர் ஆறு போல் ஓடியதால் 2, நான்கு சக்கர வாகனங்கள் செல்ல முடியாமல் திணறின. திண்டுக்கல் ரவுண்ட் ரோடு முல்லைநகர் உள்ளிட்ட நகர் பகுதி தாழ்வான வீடுகள், கடைகளில் மழைநீர் புகுந்தது. மெயின் ரோடு, ஆ.எஸ்., ரோடு, பழநி ரோடு, வத்தலகுண்டு ரோடு உள்ளிட்ட பகுதிளில் குளம் போல் நீர் தேங்கியதால் போக்குவரத்திற்கு சிரமமாக இருந்தது. நேற்று மாலை தொடங்கிய மழை இரவு 8:00 மணி பின்பும் நீடித்தது.