உபரி ஆசிரியர்களை கள்ளர் பள்ளிக்கு மாற்ற வலியுறுத்தல்
திண்டுக்கல்:அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் உபரியாக உள்ள ஆசிரியர்களை கள்ளர் சீரமைப்பு பள்ளிகளில் பணிபுரிவதற்கான மாற்றுப்பணி ஆணையை வழங்க வேண்டும் என தேசிய ஆசிரியர் சங்கம் வலியுறுத்தி உள்ளது. அச்சங்க மாநில துணைத்தலைவர் விஜய் கூறியதாவது: அரசு கள்ளர் தொடக்க, உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் ஆசிரியர் இடங்கள் காலியாக உள்ளன. இதனால் கற்றல் கற்பித்தலில் மிகவும் பின்னடைவு ஏற்படுகிறது. இத்தகைய அசாதாரணமான சூழ்நிலையில் அரசு, ஆசிரியர்களை பணி நியமனம் செய்யும் வரை உபரியாக அரசு, உதவி பெறும் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களை கள்ளர் சீரமைப்பு பள்ளிகளில் பணிபுரிய மாற்றுப் பணி ஆணை வழங்க வேண்டும். அதன் மூலம் மாணவர்களின் கற்பித்தல் நிலையில் உள்ள பின்னடைவு வெகுவாக குறையும் என்றார்.