கூட்டணி ஆட்சி ஆதரவு கட்சியுடன் தான் கூட்டணி சொல்கிறார் கிருஷ்ணசாமி
பழநி:கூட்டணி ஆட்சிக்கு ஆதரவு தெரிவிக்கும் கட்சிகளுடன்தான் கூட்டணி என புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி தெரிவித்தார். பழநியில் அவர் கூறியதாவது: அறநிலையத் துறையின் கீழ் செயல்பட்டு வரும் கோயில்களில் அரசு திட்டங்கள் முறையாக செயல்படுத்தப்படுகிறது. ஆனால் கிராம கோயில்களில் பட்டியல் இன மக்கள் சென்று வருவது பிரச்னையாக உள்ளது. சர்வதேச சக்திகள் மாற்றத்தில் ஈடுபட்டு வருகின்றன. கோயில்களில் ஏற்படும் பிரச்னைகள் மதமாற்றம் செய்ய அதிக வாய்ப்பை ஏற்படுத்துகிறது. மத்திய, மாநில அரசுகள் கோயில்களில் சமநிலையை உருவாக்க வேண்டும். மதமாற்றம் செய்வதை தடுக்க சட்டம் இயற்ற வேண்டும். தமிழகத்தில் ஆண்கள் குடிக்கு அடிமையாகி வாழ்க்கையை இழந்துள்ளனர். தமிழக அரசு டாஸ்மாக் வருவாயை அதிகப்படுத்தும் நோக்கில் செயல்படுகிறது. புதிய தமிழகம் சார்பில் பூரண மதுவிலக்கை வலியுறுத்தி போராட்டங்கள் நடத்தப்படும். கூட்டணி ஆட்சி முறையை அமைப்பது ஒன்றே கொள்கை. கூட்டணி ஆட்சிக்கு சம்மதிக்கும் கட்சிகளுடன் புதிய தமிழகம் கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்கும். முதல்வர் ஸ்டாலின் வெளிநாடுகளுக்கு சென்று முதலீடுகளை ஈர்த்தது குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும். வெள்ளை அறிக்கை கேட்ட முன்னாள் முதல்வர் பழனிசாமிக்கு வெள்ளைத்தாளை காட்டிய டி.ஆர்.பி. ராஜாவிடம் ஒன்றும் இல்லை என்பதை காட்டுகிறது. தமிழக மக்களின் வாழ்வு நிலை, பொருளாதாரம், சுகாதாரம், நிலையான வேலையின்மை, கல்வி ஆகியவை குறித்து முதல்வர் கண்டுகொள்ளாமல் விளம்பர உலகத்தில் வாழ்ந்து வருகிறார் என்றார்.