திருக்கார்த்திகைக்கு 25 டிசைன்களில் விளக்குகள் ரெடி
திண்டுக்கல்: திருக்கார்த்திகை தீபத்திருவிழாவிற்கு ஒரிரு வாரங்களே உள்ள நிலையில் 25க்கும் மேற்பட்ட டிசைன்களில் திண்டுக்கல் பகுதியில் சுடுமண் விளக்குகள் தயாரிக்கும் பணி தீவிரமாக நடக்கிறது.திண்டுக்கல் சுற்றியுள்ள பகுதிகளில் சிறிய விளக்குகள் முதல் பெரிய குத்துவிளக்குகள் வரை சுடுமண்ணால் செய்யப்பட்டு பல்வேறு மாநிலங்களுக்கு விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. நொச்சி ஓடைப்பட்டி, வேடப்பட்டி, நல்லாம்பட்டி போன்ற பகுதிகளில் களிமண்ணைக் கொண்டு விழாக்களுக்கு ஏற்றார் போல் விநாயகர் சிலை, கொலு பொம்மைகள், குடில்கள், விளக்குகள் தயாரித்து விற்பனை செய்தும் வருகின்றனர்.இத்தொழிலாளர்கள் சிறிய சுட்டி, தேங்காய், முறம், காமாட்சி, மேஜிக், மாட, லட்சுமி, ஸ்டார், அன்ன, குத்து மற்றும் குபேர விளக்கு என பல்வேறு வகையான விளக்குகளை களிமண்ணால் செய்கின்றனர். பின்னர் இதை சூலையில் சுட்டு எடுத்து வர்ணம் தீட்டுகின்றனர். இதன் பின் விற்பனைக்கு அனுப்புகின்றனர். வியாபாரிகள் தயாரிக்கும் இடத்துக்கே சென்று இவற்றை வாங்கியும் செல்கின்றனர்.உற்பத்தியாளர் கஜேந்திரன் கூறியதாவது : வாடிக்கையாளர் விரும்பும் வண்ணம் விளக்குகளை தயாரித்து கொடுப்பதால் அதிகமாக வியாபாரிகள் வருகின்றனர். குறிப்பாக இங்கு தயாராகும் மேஜிக் விளக்கில் பின்புறம் எண்ணெய் ஊற்றி நேராக நிறுத்தி வைத்தாலும் எண்ணெய் கீழே வருவது இல்லை. மெழுகு, உலோகம் என பல்வேறு வகைகளில் விளக்குகள் வந்தாலும் களிமண்ணால் செய்யக்கூடிய விளக்குகளுக்கு தற்போது வரை மவுசு குறையவில்லை என்றார்.