குக்கிராமங்களிலும் தடை லாட்டரி விற்பனை அமோகம் பெயரளவு நடவடிக்கையால் பலரும் பாதிப்பு
சில ஆண்டுகளுக்கு முன்பு வரை தமிழகத்தில் லாட்டரி விற்பனையால் பல குடும்பங்கள் கடனில் சிக்கி தற்கொலைக்கு தள்ளப்படும் அவல நிலை உருவானது.நடுத்தர ஏழை மக்களின் வருமானத்தை சுரண்டி பல குடும்பங்களே அழிவுக்கு உள்ளாகியதால் 2003 ல் இதனை மாநில அரசு தடை செய்தது. அண்டை மாநிலங்களில் தற்போது வரை விற்பனை தொடரும் சூழலில் இவற்றுக்கான பல மறைமுக விற்பனை நிலையங்கள், திண்டுக்கல் மாவட்டத்தில் பரவலாக நகர் பகுதிகள் மட்டுமின்றி குக்கிராமங்களிலும் செயல்பட்டு வருகின்றன. அரசியல், செல்வாக்கு, கவனிப்பு போன்றவற்றால் இவற்றின் மீதான நடவடிக்கை பெயரளவில் மட்டுமே உள்ளதாக புகார் எழுந்துள்ளது.ஆதரவற்றோர், இதற்கென நியமிக்கப்பட்ட சிலரை கணக்கு காட்டும் வகையில் கைது ,சொற்ப எண்ணிக்கையில் லாட்டரி சீட்டுகள் பறிமுதல் என நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதனால் இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் பெருமளவில் பாதிக்கப்படுகிறார்கள். மேலும் பல குடும்பங்கள் நிற்கதியாக நிற்கின்றனர். பள்ளி மாணவர்கள் குடும்ப சூழல் குறித்து துன்பங்களை சந்திக்கிறார்கள்.இதனால் நடுத்தர, ஏழை கூலித் தொழிலாளர்கள் பலர் பரிசுத்தொகை குறித்த ஆர்வத்தால் தினமும் வருவாயை இழக்கும் அபாய நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளனர். மாவட்ட போலீஸ் நிர்வாகம் இப்பிரச்னையில் அப்பாவி மக்கள் பாதிப்படைவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.--