உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / மாவட்டத்தில் லாட்டரி விற்பனை அமோகம்: கண்டுக்காத காவல்துறையினர்

மாவட்டத்தில் லாட்டரி விற்பனை அமோகம்: கண்டுக்காத காவல்துறையினர்

லாட்டரியில் சிறிய முதலீட்டில் அதிர்ஷ்டத்தின் பலனால் பெரிய லாபம் ஈட்டலாம். வறுமையை தலைகீழாக மாற்றிவிடலாம் என எண்ணி இதன் மீது மோகம் கொண்டவர்கள் அதிகம் உள்ளனர். குலுக்கல் லாட்டரி மீதான குருட்டு நம்பிக்கையே பல குடும்பங்களின் வாழ்க்கையை சீரழித்தது. ஏராளமான குடும்பத்தினர் பொருள் இழப்புகள், உயிர் இழப்புகளை சந்தித்தனர். அன்றாடம் கூலிவேலை செய்து பிழைப்பு நடத்தும் மக்களின் நலனை கருத்தில் கொண்டும், தினசரி வருமானத்தை மட்டுமே நம்பி உள்ள குடும்பத்திற்கு பொருளாதார பாதுகாப்பை உறுதிசெய்யும் வகையிலும் லாட்டரி விற்பனையை தமிழக அரசு தடை செய்தது. ஆனால் திரைமறைவில் இன்றுவரை லாட்டரி விற்பனை தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. திண்டுக்கல் மாவட்டத்தில் பல இடங்களில் அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி டிக்கெட்டுகள் தங்கு தடையின்றி விற்பனை செய்யப்படுகிறது. சாதாரண ஏழை, கூலித்தொழிலாளர்கள், ஆட்டோ, லாரி டிரைவர்கள், சுமை துாக்குபவர்கள், ஓட்டல் தொழிலாளர்கள் என தினசரி வேலைக்கு சென்று ஈட்டுவோர், அவர்களின் வருமானத்திலிருந்து குறைந்தபட்சம் 200 முதல் 300 ரூபாய் வரை லாட்டரி வாங்குவதற்காக செலவழிக்கின்றனர். இரவும், பகலும் தங்கு தடையின்றி சட்ட விரோதமாக விற்பனை செய்யப்படும் லாட்டரியால் பல தொழிலாளர்கள் மட்டுமின்றி அவர்கள் சார்ந்த குடும்பத்தினரும் பாதிக்கிறார்கள். இருந்தும் நடவடிக்கை எடுக்க காவல் துறை கண்டுக்காமல் உள்ளது. மாவட்ட நிர்வாகம் இதில் கவனம் செலுத்தி தடை லாட்டரி விற்பனையை முற்றிலும் கட்டுப்படுத்த வேண்டும். லட்டரி விற்பனையில் ஈடுபடுவோர் மீது காவல் துறை மூலம் கடுமையான நடவடிக்கை எடுக்கவேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை