எரியோடு : எரியோடு மறவபட்டியில் நீர் வழங்கும் வரட்டாறு தடுப்பணை சிதைந்து கவனிப்பாரின்றி கிடப்பதால் தர்ம மடை குளம் வறண்டு கிடக்கிறது.பல்வேறு காலங்களில் நமது முன்னோர் கடும் பஞ்சங்களை சந்தித்ததையடுத்து பஞ்சத்திலிருந்து பாதுகாப்பு பெற மழை நீர் சேகரிப்பு அவசியம் என்பதை உணர்ந்து ஆங்காங்கே ஊருணிகள், குளங்கள், கண்மாய்கள், ஏரிகளை உருவாக்கினர். சமீப ஆண்டுகளில் 2003, 2017ல் கூட கடும் தண்ணீர் பஞ்சம் ஏற்பட்டு தென்னை மரங்கள் காய்ந்து விவசாயிகள் கடும் பாதிப்படைந்தனர். அவர்களுக்கு அரசு சார்பில் நிவாரணமும் வழங்கப்பட்டது. அரசு நிலத்தடி நீர் மட்டம் மேம்பட அனைத்து கட்டடங்களிலும் மழை நீர் சேகரிப்பு திட்டத்தை அரசு கட்டாயமாக்கியது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் சமீப ஆண்டுகளில் பல குளங்கள் அரசு நிர்வாகத்தின் அலட்சிய போக்கால் நீர் வரத்து வாய்ப்பை இழந்து வருகின்றன. இவற்றுள் ஒன்றான எரியோடு மறவபட்டி தர்மமடை குளம் குறித்து இங்கு பார்ப்போம். வடமதுரை ஒன்றியம் பாகாநத்தம் மலைப்பகுதியில் பெய்யும் நீரின் ஒரு பகுதி எல்லையாறு என்ற பெயரில் உருண்டோடி எரியோடு அருகே மத்தனம்பட்டி குளத்தை சேர்கிறது. இடைவழியில் எரியோடு பேரூராட்சியில் மறவபட்டி கிராமம் அருகில் உள்ளது தர்ம மடை குளம். மறவபட்டி மயானம் அருகில் எல்லையாற்றில் ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்ட தடுப்பணை மூலம் நீர் பிரித்து தர்ம மடை குளம் நிரப்பப்பட்டு வந்தது. இக்குளம் நிரம்பியதும் மீண்டும் மறுகால் பாய்ந்து அதே எல்லையாற்றிற்கு சென்று சேர்ந்துவிடும். ஆனால் மயானம் அருகில் கட்டப்பட்டிருக்கும் தடுப்பணை சிதைந்து போய் மீண்டும் கட்டமைக்கப்படாமல் கிடப்பில் விடப்பட்டுள்ளதால் தர்ம மடை குளத்திற்கு நீர் வருவது முற்றிலுமாக நின்றுவிட்டதால், பல ஆண்டுகளாக வறண்டு கிடக்கிறது. இதை நம்பி இருக்கும் பல ஏக்கர் நில விவசாயிகள் பரிதவிக்கின்றனர். -தடுப்பணை கட்ட வேண்டும்
கே.பெருமாள்,விவசாயி,மறவபட்டி: மறவபட்டி எல்லையாற்றில் தடுப்பணை இருக்கும் பகுதியின் ஒரு பக்கம் எரியோடு பேரூராட்சியும், மறுபக்கம் நாகையகோட்டை ஊராட்சி பகுதியாகவும் உள்ளது. இந்த தடுப்பணை சிதையாமல் இருந்தால், எல்லையாற்றில் நீர் வரும்போது எளிதாக 6 ஏக்கர் பரப்புள்ள தர்ம மடை நிரம்பி மறுகால் பாயும் வாய்ப்புள்ளது. அதிகாரிகள் கவனம் செலுத்தி தடுப்பணையை மீண்டும் கட்ட வேண்டும். தர்ம மடை குளம் நிரம்பினால் சுற்றுப்பகுதி விவசாய கிணறுகளுக்கும், உள்ளாட்சி அமைப்பின் நீர் ஆதாரங்களுக்கும் நிலத்தடி நீர்மட்டம் அதிகரிக்கும். நடவடிக்கை எடுக்க வேண்டும்
பி.சீனிவாசன், விவசாயி, மறவபட்டி: தடுப்பணையிலிருந்து தர்ம மடை குளத்திற்கு நீர் வரத்து பாதிக்கக் கூடாது என்பதற்காக 1989ல் உருவான திண்டுக்கல் கரூர் ரயில் பாதைக்கு கீழ் சிறு பாலமும் கட்டியுள்ளனர். குளத்தில் இருக்கும் மண்ணை சிலர் தொடர்ந்து அள்ளியதால் நன்றாக ஆழமாக மாறியது. அதே நேரம் மண் அள்ளுபவர்கள் கரையை பலமாக்கும் வேலையை செய்ய மாட்டார்கள். எனவே, அரசு நிர்வாகம் தடுப்பணை சீரமைப்பு பணியுடன் தர்ம மடை குளத்தின் கரையை பலமாக்கும் நடவடிக்கையையும் செய்ய வேண்டும். -முயற்சி செய்வோம்
கே.முத்துலட்சுமி,பேரூராட்சி தலைவர்,எரியோடு: எல்லையாற்றில் தடுப்பணை பகுதி இருக்கும் இடம் பேரூராட்சி, ஊராட்சி பகுதி எல்லைகள் பிரியும் இடத்தில் அமைந்துள்ளது. இங்குள்ள தடுப்பணையை சீரமைக்க வலியுறுத்தி பேரூராட்சி மூலம் தீர்மானம் நிறைவேற்றி, கலெக்டர், பொதுப்பணித்துறையினர் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும். தடுப்பணையை சீரமைத்து தர்ம மடை குளத்திற்கு நீர் வரத்து தடையின்றி கிடைக்க தொடர்ந்து முயற்சி செய்வோம்.