மலைப்பகுதியில் அழிவின் விளிம்பில் மலை வாழை
தாண்டிக்குடி; தாண்டிக்குடி மலைப்பகுதியில் புவிசார் குறியீடு பெற்ற மலை வாழை அழிவின் விளிம்பில் உள்ளதை பாதுகாக்க வேண்டும்.தாண்டிக்குடி கீழ் மலைப் பகுதியில் மருத்துவ குணம் நிறைந்த மலைவாழைக்கு 2008ல் புவிசார் குறியீடு கிடைத்தது. விவசாயிகள் மலைவாழை உற்பத்தியை அதிகரிக்க நடவடிக்கை எடுத்து வந்த நிலையில் இதற்கு முட்டுக்கட்டையாக முடிக்கொத்து நோய், காட்டு யானை நடமாட்டத்தால் விவசாயம் பரப்பு சுருங்க தொடங்கியது.புவிசார் குறியீடு தகுதி பெற்ற இம்மலை வாழை உற்பத்தியை அதிகரிக்க தோட்டக் கலைத்துறை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. மாறாக வனத்துறையும் யானை நடமாட்டத்தை கட்டுப்படுத்தும் முயற்சியும் தோல்வியில் முடிந்துள்ளது. இது போன்ற பல்வேறு பிரச்னைகளால் ஆயிரக்கணக்கான ஏக்கரில் இருந்த மலை வாழை உற்பத்தி தற்போது சொற்ப எண்ணிக்கையில் சாகுபடி செய்யப்பட்டு அழிவின் விளிம்பில் உள்ளது. இதை காக்க தோட்டக்கலைதுறை துரித நடவடிக்கை மேற்கொள்வது அவசியமாகிறது.ரவிச்சந்திரன், விவசாயி: தாண்டிக்குடி மலைப் பகுதியில் துவக்க காலகட்டத்தில் விவசாயிகளின் வாழ்வாதாரமாக வாழை விளங்கியது. மருத்துவ குணம் நிறைந்த இவ்வாழைக்கு மேலும் பெருமை சேர்க்கும் வகையில் புவிசார் குறியீடு பெற்ற அங்கீகாரமும் கிடைக்கப்பெற்றது. இருந்த போதும் சில ஆண்டுகளாக காட்டு யானை நடமாட்டத்தால் இவ்வாழை உற்பத்தி பாதிக்க தொடங்கியது. யானை நடமாட்டத்தால் விவசாயிகள் வாழை நடவு செய்ய முடியாத நிலையில் பின்தங்கினர். இதனால் ஏராளமான ஏக்கரில் சாகுபடி செய்யப்பட்ட மலை வாழை தற்போது குறைந்த ஏக்கரில் சாகுபடியாகி அழிவின் விளிம்பில் உள்ளது. விவசாயத்தை காக்க வனத்துறை யானை நடமாட்டத்தை ஒழுங்குபடுத்த வேண்டும். மேலும் நோய் தாக்குதலை தவிர்க்கவும், பரப்பை அதிகரிக்க தோட்டக்கலைத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும். தீர்வு
காட்டு யானை நடமாட்டத்தை கட்டுப்படுத்த திண்டுக்கல், கொடைக்கானல் வனக்கோட்டத்தினர் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். பயிர் சேதத்திற்கு அன்றைய சந்தை மதிப்பு ஏற்றவாறு விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க வேண்டும். விவசாய நிலங்களுக்கு அருகிலுள்ள வனப்பகுதியில் சூரிய மின் வேலி அமைத்து பராமரிக்க வேண்டும்.விவசாய தோட்டங்களிலும் இவ்வகையான வேலிகளுக்கு மானியம் அளிக்க வனத்துறை, தோட்டக் கலைத்துறை முன் வரவேண்டும். தரைப்பகுதியிலிருந்து இடம் பெயரும் யானைகள் வழிதடத்தை கண்டறிந்து அகழி,தொங்கு சூரிய மின்வேலியை அமைத்து தொடர் கண்காணிப்பில் வனத்துறை ஈடுபட வேண்டும்.