பழநியில் நவராத்திரி திருவிழா செப்.22ல் துவங்குகிறது
பழநி; திண்டுக்கல் மாவட்டம் பழநி முருகன் கோயில் நிர்வாகத்தின் துணை கோயிலான பெரியநாயகி அம்மன் கோயிலில் செப்., 22ல் காப்பு கட்டுதலுடன் நவராத்திரி விழா துவங்கும் நிலையில் விழா நாட்களில் தங்கரத புறப்பாடு நிறுத்தப்படுகிறது. விழாவில் அக்., 1ல் அம்பு எய்தல் நடக்கிறது. இவ்விழா நாட்களில் தினமும் மாலை 6:00 மணிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நடக்கிறது. அக்., 1 மதியம் 1:30 மணிக்கு முருகன் கோயிலில் சாயரட்சை பூஜை, மதியம் 3:00 மணிக்கு பராசத்தி வேல் புறப்பட்டு பெரியநாயகி அம்மன் திருக்கோயிலை அடைகிறது. தங்கக்குதிரை வாகனத்தில் முத்துக்குமாரசுவாமி புறப்பட கோதைமங்கலத்தில் அம்பு எய்தல் நடக்கிறது. பின் சுவாமி பெரியநாயகியம்மன் கோயிலை வந்தடைகிறார். தொடர்ந்து பராசக்தி வேல் மலைக்கோயில் அடைந்த பின் அர்த்தசாம பூஜை நடைபெறும். இவ்விழாவை முன்னிட்டு செப்., 22 முதல் அக்., 1 வரை முருகன் கோயில் தங்கரத புறப்பாடு நடைபெறாது என கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.