வசதிகளில் புறக்கணிப்பு;பட்டா வழங்குவதில் இழுபறி கொடைக்கானல் 13வது வார்டில் தொடரும் அவலம்
கொடைக்கானல்:அடிப்படை வசதிகளில் புறக்கணிப்பு, பட்டா வழங்குவதில் இழுபறி என கொடைக்கானல் நகராட்சி 13வது வார்டு மக்கள் பாதிக்கின்றனர். தெரசா நகர்,டோபிக்கானல், பெர்னியல் ரோடு உள்ளிட்ட பகுதிகளை கொண்ட இந்த வார்டில் சாக்கடை துார்வாரப்படாததால் கொசு தொல்லை அதிகரிக்க தொற்றுநோய்களுக்கு வழிவகுக்கிறது. எரியாத தெரு விளக்குகளால் இரவில் இருள் சூழந்து அச்சநிலையை ஏற்படுத்துகிறது. நன்னீர் ஓடையில் கலக்கும் கழிவுநீரால் சலவைத் தொழிலாளர்களுடன் பொது மக்களும் பாதிப்பை சந்திக்கின்றனர். காட்டுமாடுகள் குடியிருப்புகளில் நடமாடுவதால் மக்களுக்கு அச்சுறுத்தலாக உள்ளது. பட்டா இல்லாமல் அரசு சலுகைகளை பெற முடியாமல் மக்கள் அல்லாடுகின்றனர்.பராமரிப்பில்லாத அரசு பள்ளி மைதானத்தால் மாணவர்கள் பாதிக்கின்றனர். தெரசா அருவியில் குவியும் குப்பையால் சுற்றுலா பயணிகள் முகம் சுளிக்கின்றனர். குப்பையால் சுகாதாரக் கேடு பிரமிளா, குடும்பத் தலைவி : குப்பை சரிவர அள்ளுவதில்லை. சாக்கடை துார்வாராமல் துர்நாற்றம் வீசுகிறது. குடிநீர் சப்ளை ஒரு மணி நேரத்திற்கு பதில் கூடுதல் நேரம் அளிக்க வேண்டும். அ.தி.மு.க., ஆட்சியில் கட்டமைக்கப்பட்ட தரை மட்ட தொட்டி இடிக்க அதிலிருந்த தொட்டி மாயமாகி விட்டது. தெருவிளக்கு சரிவர எரிவதில்லை, வார்டில் நடமாடும் காட்டுமாடால் குடியிருப்பு வாசிகள் அவதிப்படும் நிலை உள்ளது. வார்டு கவுன்சிலருக்கு பதில் கணவரின் ஆதிக்கமே அதிகம் உள்ளது. இவரது மிரட்டும் போக்கால் மக்கள் அவரிடம் குறைகளை கூற அச்சமடைந்துள்ளனர். வார்டில் அமைக்கப்பட்ட சிமென்ட் ரோடு சேதம் அடைந்துள்ளது. தெரசா நகர் ஓடையில் குவிக்கப்படும் குப்பையால் சுகாதாரக் கேடு ஏற்பட்டுள்ளது. குறைகளை கண்டு கொள்வதில்லை மனோகரன், சலவைத் தொழிலாளி: டோபிக்கானல் பகுதியில் வரும் நன்னீர் ஒடையில் ஓட்டல் கழிவுகள், சாக்கடை நீர் கலப்பதால் சலவை தொழிலாளிகளான எங்கள் கால்களில் ஒவ்வாமை ஏற்பட்டு நோய் பிரச்னையில் அவதிப்பட்டு வருகிறோம். சலவை தொழிலாளர்களுக்கான அரசு சலுகைகள் அறவே இல்லாத நிலையில் அவதிப்படுகிறோம். நாங்கள் வசிக்கும் வீடுகளுக்கு நகராட்சி வாடகை வசூலிக்கும் நிலையில் பராமரிப்பு பணிகள் அறவே செய்யாத நிலை உள்ளது. வார்டு கவுன்சிலர் எங்களது குறைகள் குறித்து கண்டு கொள்வதில்லை. தனிக்குழாய் அமைக்க வலியுறுத்தியும் நடவடிக்கை இல்லை. மூஞ்சிக்கல் பகுதியில் கனமழை பெய்யும் போது தாழ்வாக உள்ள டோபிக் கானல் பகுதியில் மழைநீர் புகுவதால் அவதிப்படுகிறோம். இங்குள்ள மூஞ்சிக்கல் மைதானம் அறவே பராமரிப்பு இல்லாமல் உள்ளது. கூரையை சீரமைக்க நடவடிக்கை வைலட், கவுன்சிலர், (தி.மு.க.,): ரூ. 85 லட்சத்தில் வளர்ச்சி பணிகள் செய்யப்பட்டுள்ளன. டோபிக்கானல் ஆற்றில் விடுதிகள் மூலம் கலக்கும் கழிவு குறித்து நகராட்சியில் புகார் அளிக்கப்பட்டு சம்பந்தப்பட்ட விடுதிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். சலவை தொழிலாளிகள் சந்திக்கும் பிரச்னையை சமாளிக்க பழநி எம்.எல்.ஏ., மூலம் தொட்டி அமைக்கவும், சேதமடைந்த வீடுகள் கூரையை சீரமைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது. வார்டில் உள்ள காட்டுமாடு பிரச்னைகளை சரி செய்ய வனத்துறை மூலம் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மைதான பகுதியில் கட்டப்பட்டுள்ள சுகாதார கழிப்பறை 10 தினங்களில் திறக்கப்பட்டு பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும். குப்பை நாள்தோறும் துப்புரவு பணியாளர்களால் அள்ளப்பட்டு வருகின்றன. கவுன்சிலருக்கு பதில் கணவர் செயல்பாடு இல்லை. அருவியில் குப்பை கொட்டும் பொதுமக்கள் எச்சரிக்கை செய்யப்பட்டுள்ளனர் என்றார்.