சுத்திகரிப்பு நிலையத்தை முடக்கிய எதிர்கட்சிகள் அமைச்சர் ஐ.பெரியசாமி குற்றச்சாட்டு
சின்னாளபட்டி, : சின்னாளபட்டியில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து முடக்கி விட்டனர்'' என அமைச்சர் ஐ.பெரியசாமி பேசினார்.சின்னாளபட்டி அரசு சமுதாய நல நிலையத்தில் நடந்த புதிய ஆய்வக கட்டடத்தை திறந்து வைத்த அவர் பேசியதாவது: தி.மு.க., ஆட்சியின்போது கர்ப்பிணிகள் நலன் கருதி, சித்தையன்கோட்டை, சின்னாளபட்டியில் 30 படுக்கைகளுடன் கூடிய நவீன சிகிச்சை அரங்கம் திறக்கப்பட்டது. அதன் பின் அ.தி.மு.க., ஆட்சியில் எந்த ஒரு நலத்திட்டமும் செயல்படுத்தப்படவில்லை. சின்னாளபட்டி அரசு சமுதாய நல நிலையத்தை அரசு மருத்துவமனையாக தரம் உயர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அவசர சிகிச்சை பிரிவு கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும்.திண்டுக்கல் -மதுரை தேசிய நெடுஞ்சாலையில் விபத்து சிகிச்சை மையம் அமைக்க இடம் தேர்வு பணி நடக்கிறது. திண்டுக்கல்-செம்பட்டி ரோட்டில் தொழிலாளர் நல மருத்துவமனை அமைக்கப்பட உள்ளது. சின்னாளபட்டி சாயப்பட்டறையில் இருந்து வெளியேறும் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க இடம் தேர்வு செய்யப்பட்டது. இதற்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து நீதிமன்றம் வரை சென்று தடுத்தனர். விரைவில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்படுவது உறுதி என்றார்.ஒன்றிய தலைவர் மகேஸ்வரி, தி.மு.க., கிழக்கு ஒன்றிய செயலாளர் முருகேசன், பி.டி.ஓ., க்கள் தட்சிணாமூர்த்தி, அருள்கலாவதி, பேரூராட்சி தலைவர் பிரதீபா, செயல் அலுவலர் இளவரசி பங்கேற்றனர்.