திண்டுக்கல்: புதர் மண்டிய பிளாட்களால் விஷ ஜந்துக்கள் நடமாட்டம்,சேதமான ரோடுகள்,வேகமாக செல்லும் வாகனங்கள்,கண்காணிப்பு கேமராக்கள் இல்லாததால் சமூக விரோத செயல்கள் என அடிப்படை வசதிக்காக ஏங்கும் நிலையில் திண்டுக்கல் முத்துநகர்,வேதாந்திரி நகர் மக்கள் உள்ளனர்.திண்டுக்கல் கலெக்டர் அலுவலகம் செல்லும் ரோட்டிலுள்ள இ.பி.காலனியில் உள்ள முத்துநகர்,வேதாந்திரி நகர் குடியிருப்போர் நலச்சங்க தலைவர் துரைசிங்,இணைத் தலைவர் ஜெயராமன், பொருளாளர் சிவசங்கரன்,செயற்குழு உறுப்பினர்கள் ஜெயக்குமார், கலாவதி, பத்மாவதி,கலாவதி, சந்திரா,செல்வி, முத்துலெட்சுமி கூறியதாவது: அறிவு திருக்கோயில் ரோட்டில் மேடு பள்ளமுமாக இருப்பதால் விபத்து அபாயம் உள்ளது. இ.பி.காலனி பைபாஸ் சந்திப்பு ரோடு சேதத்தால் வாகன ஓட்டிகள் முதுகு தண்டு வட பாதிப்புக்கு ஆளாகின்றனர். இதை சீரமைக்க செட்டிநாயக்கன்பட்டி ஊராட்சி நிர்வாகம் முன்வர வேண்டும். தெருநாய்களை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.வ.உ.சி.நகர், சுந்தர் நகர், நேதாஜி நகரின் பல இடங்களில் உபயோகமின்றி கிடக்கும் பிளாட்களில் புதர் மண்டியுள்ளதால் குடியிருப்பு பகுதிகளில் விஷபூச்சிகளின் நடமாட்டம் அதிகம் உள்ளது. பிளாட் உரிமையாளர்களுக்கு நோட்டீஸ் அனுப்பி அவரவர்கள் தங்களது இடங்களை துாய்மையாக வைத்து கொள்ள அறிவுறுத்த வேண்டும். ஜல்ஜீவன் திட்டத்தின் கீழ் ஊராட்சி நிர்வாகத்திலிருந்து ரூ.3 ஆயிரம் டெபாசிட் தொகையும், ரூ.600 அட்வான்ஸ் தொகையும் செலுத்தி ஆண்டுகள் கடந்து விட்டது. பலமுறை பலதரப்பில் முறையிட்டும் நடவடிக்கை இல்லை வ.உ.சி.நகர், முத்துநகர், வேதாந்திரி நகர் பகுதிகளில் கேமரா அமைத்து காவல் துறையின் கட்டுப்பாட்டில் கண்காணித்தால் சமூக விரோத செயல்களுக்கு கடிவாளம் கட்டுவதாக அமையும். அந்த அளவிற்கு நான்கு வழிச்சாலையை நோக்கிய டூவீலர்காரர்களின் பயண வேகம் அதிகரித்துள்ளது. முத்துநகர், வேதாந்திரி நகர், நேதாஜி நகர், வ.உ.சி., தெருவில் வசிக்கும் பல நுாறு குடும்பங்களுக்கென தனியாக ரேஷன் கடை அமைக்க கோரிக்கை வைத்துள்ளோம். பழைய கரூர் ரோட்டின் மேம்பால பணிகளானது பல ஆண்டுகளாக ஆமை வேகத்தில் நடப்பதால் எம்.வி.எம்.நகர் வழியான மினிபஸ் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் எங்கள் பகுதிக்கு போக்குவரத்து வசதி அடியோடு இல்லை என்ற நிலை உள்ளது. பல நேரங்களில் தெருமுனையில் கிடக்கும் குப்பை தீப்பற்றி எரிவதால் காற்று மாசடைகிறது. பெரியவர்களின் நடைப்பயிற்சிக்காகவும், குழந்தைகள் விளையாட பூங்கா வசதியின்றி உள்ளது. ஆர்.எம்.காலனியில் உள்ள பூங்காவிற்கு செல்ல வசதி இல்லாததால் குழந்தைகள் ரோட்டில் விளையாடுகின்றனர். இதனாலும் விபத்து அபாயம் உள்ளது. இதற்கான இடம் ஒதுக்கீடு செய்து பூங்கா அமைக்க செட்டிநாயக்கன்பட்டி ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். சாக்கடைகள் துார்வார படாததால் கழிவுநீர் தேக்கத்தால் கொசு உற்பத்தி கொடி கட்டி பறக்கிறது. பலவித காய்ச்சல் அபாயம் ஏற்பட்டு உள்ளது. சாக்கடைகளை துார்வாரி கொசு மருந்து தெளிக்க வேண்டும். குடியரசு தினத்தில் நடந்த கிராமசபை கூட்டத்தில் செட்டிநாயக்கன்பட்டியை மாநகராட்சியுடன் இணைக்கும் முடிவிற்கும் ஒட்டுமொத்த மக்களும் எதிர்ப்பு தெரிவித்துள்ளோம். ஏற்கனவே அடிப்படை வசதியில் ஊராட்சி நிர்வாகம் ஆயிரம் குறைபாடுகள் வைத்துள்ளது. குறிப்பாக வரத்தே இல்லாத காவிரி திட்ட குடிநீருக்கு வரி கட்டிய விந்தை செயல் எங்கள் பகுதியில் மட்டுமே அரங்கேறி உள்ளது. இதேபோல் பெயரளவில் மாநகராட்சியின் கட்டுப்பாட்டிற்கு எங்கள் பகுதி சென்று கூடுதல் வரிச்சுமை, ஊராட்சி வளர்ச்சி பணிகளுக்கான நிதி மறுக்க பட்டால் வாழ்வாதாரம் முற்றிலும் பாதிக்கப்படும். ஆகவே இந்த திட்டம் நிறைவேற்றப்பட ஒத்துழைக்க மாட்டோம் என்றனர்.