சேதமான ரோடால் விபத்தில் சிக்கும் மக்கள் கோதைமங்கலம் ஊராட்சியில் தொடரும் அவலம்
பழநி: பழநி கோதைமங்கலம் ஊராட்சியில் பெரியாவுடையார் கோயில் செல்லும் ரோடு சேதமடைந்துள்ளதோடு, குப்பை கொட்ட தனி இடம் இல்லாததால் ஊராட்சி மக்கள் பரிதவிக்கின்றனர்.குட்டைக்காடு, குறிஞ்சி நகர், கோதைமங்கலம், ஜவகர் நகர் உள்ளிட்ட பகுதிகளை உள்ளடக்கிய இந்த ஊராட்சியில் தனிநபர் ஆக்கிரமிப்புகள் அதிகம் உள்ளன. பழநி நகராட்சியுடன் இணைக்கப்படும் பகுதியாக தீர்மானிக்கப்பட்டுள்ளதால் புதிய வீட்டுமனைகள் உருவாக்கும் இடங்களில் தெரு விளக்குகள் அமைக்கப்படாமல் உள்ளன.இதனால் ஊராட்சி மக்கள் பாதிப்பினை சந்திக்கின்றனர். குப்பையை அள்ளுங்க
மருதபாணி, வியாபாரி, கோதைமங்கலம்:பழநி கோயில் நிர்வாகத்திற்கு உட்பட்ட பல ஆயிரம் ஆண்டுகள் பழமையான பெரியாவுடையார் கோயில் கோதைமங்கலத்திற்கு ஊராட்சியில் உள்ளது. இதற்கு செல்லும் சாலை சேதமடைந்து பல ஆண்டுகளாக உள்ளது. இச்சாலையில் தற்போது மழையால் டூவீலர்களில் செல்வோர் வழுக்கி விழும் நிலை உள்ளது. இந்த பாதையில் தான் விவசாயிகள் விளை பொருட்களை எடுத்து செல்கின்றனர். வெளியூரிலிருந்து பிரதோஷ வழிபாடு செய்ய அதிக அளவில் பக்தர்கள் வருவதால் ஊராட்சி பகுதி குப்பையை முறையாக அள்ள வேண்டும். திறந்த வெளி கழிப்பிடம்
முத்துக்குமார்,பிளம்பர், கோதைமங்கலம்: பொது சுகாதார வளாகம் இல்லாததால் நாலாவது வார்டு மக்கள் திறந்த வெளியை கழிப்பிடமாக பயன்படுத்தி வருகின்றனர். ஆக்கிரமிப்புகள் அதிகம் உள்ளது. சுகாதார வளாகம் கட்டப்பட வேண்டும். ஆரம்ப சுகாதார நிலையங்களை சரி செய்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும். குப்பை கொட்ட தனி இடம் இல்லை
பார்த்திபன், பா.ஜ ., கிழக்கு ஒன்றிய துணைத் தலைவர்: கோதைமங்கலம் பகுதியில் குப்பை கொட்ட தனி இடம் இல்லை . இதை கருதி ஊராட்சிக்கு சொந்தமாக குப்பை கொட்ட இடம் வாங்க வேண்டும். தெருவிளக்கு,இளைஞர்களுக்கான விளையாட்டு மைதானம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். நடவடிக்கை எடுக்கப்படும்
பிரபாகரன்,துணைத் தலைவர் : நான்கு மேல்நிலை குடிநீர் தொட்டிகள் அமைக்கப்பட்டுள்ளன .பெரும்பாலான பகுதிகளுக்கு பேபர் பிளாக் சாலைகள், கான்கிரீட் சாலைகள், தார் சாலைகள் அமைக்கப்பட்டுள்ளன. பெரும்பாலும் ஊராட்சி பகுதிகளில் சொந்தமாக குப்பை கொட்ட இடம் இல்லை. எதிர்வரும் காலங்களில் நடவடிக்கை எடுக்கப்படும். கட்டமைப்பு இல்லை
செல்வகுமார், ஊராட்சி தலைவர் : தனிநபர் ஆக்கிரமிப்புகளை அகற்ற வருவாய் துறை சார்பில் நடவடிக்கை எடுத்து வருகிறோம். அதற்கான தீர்வு விரைவில் எட்டப்படும். சுகாதார வளாகங்கள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். ஊராட்சி அலுவலகம் வரை தார் சாலை அமைக்கப்பட்டுள்ளது. தற்போது பழநி நகருடன் இணைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்ட பயனாளிகள் பாதிப்பு அடைவதோடு நகராட்சியுடன் இணைப்பதற்கான கட்டமைப்புகளும் தற்போது ஊராட்சியில் இல்லை என்றார்.