அய்யலுாரில் 3000 பனை விதைகள் நடவு
வடமதுரை: மழையை பயன்படுத்தி திண்டுக்கல் மாவட்டம் அய்யலுாரில் 3000 பனை விதைகள் நடவு செய்யும் பணி துவங்கியது. திண்டுக்கல் மாவட்டம் அய்யலுார் தும்மனிக்குளத்திற்கு வரட்டாற்று நீரை கொண்டுவர விவசாயிகள், நீர்நிலை ஆர்வலர்கள் தீவிரம் காட்டி வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக தற்போதைய மழை கால சூழ்நிலையை பயன்படுத்தி கரையை பலப்படுத்தும் வகையில் 3000 பனை விதைகள் நடவு செய்யும் பணி நேற்று துவங்கியது. அய்யலுார் வனச்சரக அலுவலர் முருகேசன் துவக்கி வைத்தார். வனவர்கள் முரளி, கார்த்திகேயன், நீர்நிலை ஆர்வலர்கள் மகிடேஸ்வரன், கோபாலகிருஷ்ணன், ஆயக்கட்டு விவசாயிகள் சங்க தலைவர் வேங்கன், எம்.கே.ஜி., பள்ளி தாளாளர் சந்திர சேகர் பங்கேற்றனர். முருகேசன் பேசிய தாவது: தமிழ்நாடு மாநில மரமான பனை மூலம் நுங்கு, பதனீர், கருப்பட்டி, பனங்கற்கண்டு, பன மிட்டாய், பனம்பழம், பானங்கள் கிடைக்கிறது. பனை ஓலை மூலம் பாய், கூடை, கூரைகள் கட்ட முடிகிறது. பனை மரம் இறந்த பின்னர் மரத்தண்டு மர வேலைகளுக்கு உதவுகிறது. பனை வேர் நிலத்தடி நீர் சேமிக்க உதவுகிறது. இவ்வாறு பல வகை களிலும் உதவிடும் பனை மரங்களை பாதுகாக்க வேண்டும். ஒட்டு மொத்த நிலப்பரப்பில் 33 சத வீதம் பசுமையான மரங்கள் கொண்ட பகுதியாக இருந்தால் மட்டுமே மனித இனம் தொடர்ந்து வாழ முடியும். இதற்காக நமது நாட்டில் மரம் வளர்க்க ஜப்பான் போன்ற நாடுகள் நிதி உதவி வழங்குகின்றன. இருக்கும் மரங்களை பாதுகாக்க வேண்டும். கூடுதலாக மரங்களையும் நட்டு வளர்க்க வேண்டும். நாம் பிறந்தநாள், விசேஷங்கள் நினைவக மரங்களை நட வேண்டும் என்றார்.