கோடை காலத்திலும் தாகம் தீர்க்காத தண்ணீர் தொட்டிகள்
சின்னாளபட்டி: திண்டுக்கல்-மதுரை நான்கு வழிச்சாலையில் கோடை காலத்தில் கூட உள்ளாட்சிகளால் கண்டுகொள்ளப்படாத தண்ணீர் தொட்டிகளால் பயணிகள் தவிப்பிற்குள்ளாகின்றனர்.இந்த நான்கு வழிச்சாலை 2011 முதல் செயல்பாட்டிற்கு வந்தது. தோமையார்புரம் துவங்கி அண்ணாமலையார் மில்ஸ், சிறுநாயக்கன்பட்டி, கலிக்கம்பட்டி, செட்டியபட்டி, சின்னாளபட்டி புறநகர், காந்திகிராமம், அம்பாத்துறை விலக்கு, அமலிநகர், முருகன்பட்டி, பெருமாள் கோவில்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் இருபுற ரோட்டை பாதசாரிகள் கடப்பதற்கும், இருசக்கர வாகனங்கள் திருப்பி செல்வதற்கும் தேசிய நான்கு வழிச்சாலை நிர்வாகம் சோலார் மின் விளக்குகளை அமைத்திருந்தது. வாகன போக்குவரத்திற்கு ஏற்ப இரு புறங்களிலும் ரோடு சந்திப்புகளில் இணைப்பு சாலை, பெருமளவு இடங்களில் மின்விளக்குகள், பஸ் ஸ்டாப்புகளில் ஹை-டெக் நிழற்கூரை, தண்ணீர் தொட்டி, டோல்கேட் பகுதியில் இருந்து கண்காணிப்பதற்கு ஏற்ப உயர் கோபுர கேமராக்கள், ரோட்டோர சரக்கு வாகன நிறுத்துமிடங்கள், வாகன ஓட்டுனர்களுக்கான ஓய்வறை உள்பட ஏராளமான வசதிகள் ஏற்படுத்தப்பட்டன. டிவைடரில் கண் கவரும் பூச்செடிகள் வளர்ப்பு மூலம் பகலில் அழகுணர்வை ஏற்படுத்துவதுடன் இரவு நேரங்களில் எதிர் திசை வாகனங்களின் விளக்கு ஒளி பாதிப்பை ஏற்படுத்தாத வகையில் தடுப்பாக அமைத்திருந்தனர்.இதை பராமரிப்பதில் நெடுஞ்சாலைத்துறை ஆணையம் அலட்சியம் காட்டி வருகிறது. பெருமளவு வசதிகள் செயலிழந்து பயன்படுத்த முடியாத சூழலில் நிலையில் காட்சி பொருளாக உள்ளன. பெரும்பாலான உள்ளாட்சி அமைப்புகள் தெருவிளக்கு பராமரிப்பை அலட்சியப்படுத்தி வருகின்றன. இருள் சூழ்ந்த நிலையில் இரவு நேரங்களில் டூவீலர் ஓட்டிகளை குறிவைத்து செயின், அலைபேசி பறிப்பு சம்பவங்கள் அரங்கேறுகிறது.குடிநீர் தொட்டிகள் பல மாதங்களாக காட்சி பொருளாக உள்ளன. சேதமடைந்த நிலையில் மழைநீர் தேங்கி கொசு உற்பத்தி மையமாக மாறியுள்ளன. கோடை வெயிலின் தாக்கத்தால் தவிக்கும் பயணிகளுக்கு தண்ணீரின்றி காட்சி பொருட்களாக உள்ள தொட்டிகள் அதிருப்தியை ஏற்படுத்தி வருகின்றன..........--பராமரிப்பில் அலட்சியம்எம்.பி.பத்மநாபன், வியாபாரி, ஆலமரத்துப்பட்டி :திண்டுக்கல் தோமையார்புரத்தில் இருந்து கொடை ரோடு டோல்கேட் வரை பல இடங்களில் பஸ் ஸ்டாப்களில் குடிதண்ணீர் வசதி பெயர் அளவில் கூட இல்லை. தண்ணீர் தொட்டிகள் சேதமடைந்து பல மாதங்களாகியும் நெடுஞ்சாலைத்துறை ஆணையம் இப்பிரச்னையை கண்டு கொள்ளவில்லை. மின்விளக்கு வசதியின்றி இருள் சூழ்ந்த நிலையில் மகளிர் பயணிகள் பஸ் ஸ்டாப்களில் அச்சத்துடன் காத்திருக்கும் அவல நிலைக்கும் தீர்வு கிடைக்கவில்லை. இரவு நேரத்தில் கனரக வாகனங்களை ரோட்டோரத்தில் நிறுத்தும் வாகன டிரைவர்கள் பல நடைமுறை பிரச்னைகளை எதிர்கொள்கின்றனர். உயர் கோபுர கண்காணிப்பு கேமரா, அவசர கால அழைப்பு இயந்திரம் போன்றவையும் சேதமடைந்து கண்டுகொள்ளப்படாமல் உள்ளன.,,,,,,,,,,--இருளால் பாதிப்புமனோகரன்,பாஜ., ஆத்துார் வடக்கு ஒன்றிய பொதுச்செயலாளர் :காந்திகிராமம், பெருமாள்கோயில்பட்டி, பிள்ளையார்நத்தம் உட்பட பல இடங்களில் போதிய தெருவிளக்கு இல்லாத இருள் சூழ்ந்த பஸ் ஸ்டாப்பில் திறந்த வெளியில் பள்ளி, கல்லுாரி மாணவர்கள் காத்திருக்கின்றனர். அதிகாரிகள் அலட்சியத்தால் சிரமங்களும் பாதிப்புகளும் தொடர்ந்த போதும், இப்பிரச்னைகளுக்கு தீர்வு காண்பதில் தேசிய நெடுஞ்சாலை ஆணையம், உள்ளாட்சி அமைப்புகள் அலட்சியம் காட்டி வருகின்றன. நெடுஞ்சாலைத்துறை ஆணையத்தின் மெத்தன போக்கால் விபத்து , வழிப்பறி, திருட்டு பிரச்னைகளால் பயணிகள் பாதிக்கும் அவலமும் தொடர்கிறது. மாவட்ட நிர்வாகம் இதற்கான தீர்வை துரிதப்படுத்த வேண்டும் என்ற எதிர்பார்ப்பு நீடிக்கிறது.---
தீர்வு:
--
--
சில நாட்களாக காலை 9:00 மணிமுதலே தகிக்கும் வெயிலின் தாக்கம் நாள் முழுவதும் அதிகரித்து வருகிறது. இச்சூழலில் பஸ் ஸ்டாப்களில் பஸ்களுக்காக காத்திருக்கும் பயணிகளுக்கு குடிநீர் வசதி இன்றியமையாத அடிப்படை தேவையாக உள்ளது. தண்ணீர் தொட்டிகளை செயல்பாட்டிற்கு கொண்டு வருவதன் மூலம் பயணிகளுக்கான குறைந்த பட்ச தேவையை நிறைவேற்ற முடியும். இதற்காக திண்டுக்கல் -மதுரை வழித்தடத்தில் உள்ள ஊராட்சி, பேரூராட்சி அமைப்புகள் மூலம் சம்பந்தப்பட்ட பகுதியில் உள்ள குடிநீர் தொட்டிகளை பராமரித்து, குடிநீர் வழங்கும் துரித நடவடிக்கைகளை மாவட்ட நிர்வாகம் மேற்கொள்ள வேண்டும்.-