| ADDED : ஆக 24, 2025 03:41 AM
கொரோனா கால கட்டத்திற்கு பின் அன்றாடம் பயன்படுத்தும் அத்தியாவசிய பொருட்களான காய்கறி, இறைச்சி,பழங்கள் வீட்டு உபயோக பொருட்கள்,மளிகைப் பொருட்கள் உள்ளிட்டவை வாகனங்களில் விற்பனை செய்வது அதிகரித்துள்ளது. துவக்கத்தில் விற்பனை செய்யும் பொருட்களை சம்பந்தப்பட்டவர்கள் தெருக்களில் கூவி, கூவி விற்கும் நிலை மாறி நவீன தொழில்நுட்ப வசதியால் இவற்றை பென்டிரைவ் மூலம் பதிவு செய்து மைக் மூலம் ஒலி எழுப்பி அழைப்பு விடுக்கின்றனர். இவர்கள் கூறும் வியாபாரப் பொருட்கள் குறித்து மீண்டும். மீண்டும் ஒரே இடத்தில் அதிக சத்தத்துடன் ஒலிபெருக்கிகள் மூலம் அழைப்பு விடுப்பதால் குடியிருப்புவாசிகள் சங்கடத்திற்குள்ளாகும் நிலை உள்ளது. இதனால் உடல் நலம் பாதிக்கப்பட்டோர், முதியோர் ,பள்ளி மாணவர்கள், தியான பயிற்சியில் ஈடுபடுவோர் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளனர். இவை ஒரு புறம் இருக்க வார சந்தை, நகர் பகுதிகளின் முக்கிய சந்திப்பு உள்ளிட்டவற்றில் ஒன்றுக்கு மேற்பட்ட வாகனங்கள் மீண்டும் மீண்டும் ஒலி எழுப்புவதால் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுகிறது. இந்நிலை மாவட்டம் முழுவதும் கிராமப் பகுதிகளில் அதிகமாக உள்ளது.இவ்வாறான வாகனங்களின் சப்த அளவை குறைத்து வியாபாரம் செய்வது குறித்து பொதுமக்கள் கேள்வி எழுப்பும் நிலையில் வாக்குவாதங்கள் ஏற்படுகின்றன. இவ்வாறான வாகனங்களில் வருவோர் தொழில் போட்டியில் மைக் அமைத்து இது போன்ற செயலில் ஈடுபடுவதால் நாள்தோறும் பொதுமக்கள் பாதிக்கின்றனர். இதன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டிய போலீசார் வேடிக்கை பார்க்கின்றனர். வீடுகளை தேடி வியாபாரம் செய்வது நன்மை என்ற நிலையில் பொதுமக்களுக்கு இடையூறு இன்றி வியாபாரம் செய்வது குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.