| ADDED : பிப் 08, 2024 06:28 AM
திண்டுக்கல், : வீட்டில் சண்டையிட்டு சென்னையிலிருந்து கன்னியாகுமரி எக்ஸ்பிரசில் ஏறி திண்டுக்கல் வந்த 4 சிறுவர்களை ரயில்வே போலீசார் மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.சென்னை நாதன் மங்கலம் பகுதியை சேர்ந்தவர்கள் பரத்12, ஸ்ரீதர்13, தமிழ்12, ஹேம்நாத்14 ஆகிய 4 சிறுவர்களும் அப்பகுதியில் உள்ள பள்ளியில் 7,8 ம் வகுப்பு படிக்கின்றனர். இவர்கள் நேற்று முன்தினம் தங்களுடைய வீட்டிலிருக்கும் பெற்றோர்களிடம் சண்டையிட்டு பள்ளிக்கு செல்வதாக கூறி அங்கிருந்து சென்னை எக்மோர் ரயில்வே ஸ்டேஷன் வந்தனர். அப்போது மாலையில் பயணிகளுடன் புறப்பட்ட தயாராக இருந்த கன்னியாகுமரி எக்ஸ்பிரசில் டிக்கெட் எடுக்காமல் பயணிகளோடு பயணியாய் ஏறினர். இதை அறிந்த அவரது பெற்றோர்கள் சென்னை பள்ளிக்கரணை போலீசில் புகாரளித்தனர். தொடர்ந்து அங்கிருந்து திண்டுக்கல் ரயில்வே ஸ்டேஷனுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. இன்ஸ்பெக்டர் துாயமணி வெள்ளைச்சாமி,எஸ்.ஐ.,பாஸ்கரன்,போலீஸ் ராஜேஸ் உள்ளிட்ட போலீசார் நேற்று முன்தினம் இரவு 11:30 மணிக்கு திண்டுக்கல் ரயில்வே ஸ்டேஷன் வந்த கன்னியாகுமரி எக்ஸ்பிரசில் சோதனை செய்தனர். முன்பதிவு செய்யாத பெட்டியில் 4 சிறுவர்களும் இருந்தனர். போலீசார் அவர்களை மீட்டு அவர்களின் பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.