சறுக்கும் ரோடுகள், குறுகலான சாக்கடை அவதியில் ஒட்டன்சத்திரம் 9வது வார்டு மக்கள்
ஒட்டன்சத்திரம்: குழாய் அமைக்கும் பணிகளுக்காக சேதப்படுத்தப்பட்ட ரோடு , குறுகலான சாக்கடையில் தேங்கும் கழிவுநீரால் சுகாதாரக் கேடு என ஒட்டன்சத்திரம் நகராட்சி 9 வது வார்டில் தீர்க்கப்படாத பிரச்னைகள் ஏராளம் உள்ளன. தெருக்களில் சாக்கடை குறுகலாக இருப்பதால் கழிவு நீர் தேங்கி உள்ளது. இதனால் கொசுத்தொல்லை அதிகரித்துள்ளது. பிளாஸ்டிக் உள்ளிட்ட குப்பை கொட்டப்படுவதால் கழிவுநீர் தேங்கி துர்நாற்றம் வீசுகிறது. ஐ.டி.ஐ. ரோட்டில் சாக்கடையை மறைக்கும் அளவிற்கு புற்கள் முளைத்துள்ளன. பல இடங்களில் சாக்கடை துார் வாராப்படாமல் உள்ளது. இவற்றை துார்வாரி சுத்தம் செய்ய வேண்டும். நகராட்சியின் குப்பை கிடங்கு பயன்பாட்டில் உள்ளதால் குப்பை தேங்குவதில்லை. இருந்த போதிலும் குப்பைகள் வாங்கி சென்ற பிறகு அடுத்த நாள் வரும் வரை காத்திருக்க முடியாமல் குப்பையை காலி இடத்தில் கொட்டுகின்றனர். கொசுக்கள் தொல்லையால் மக்கள் பாதிக்கும் நிலையில் கொசு மருந்து அடிக்க வேண்டும். பல இடங்களில் குடிநீர் குழாய் பணிக்காக ரோடுகள் சேதமாகி உள்ளதால் போக்குவரத்திற்கு சிரமம் ஏற்படுகிறது. தெரு ரோடுகள் சேதம் கே.தனலட்சுமி, பா.ஜ., வார்டு தலைவர்: குடி குழாய் அமைக்கும் பணிக்காக தோண்டப்பட்ட ரோடுகள் இன்னும் சீரமைக்கப்படாமல் இருப்பதால் வாகனங்களை இயக்குவதற்கு மிகுந்த சிரமம் ஏற்படுகிறது. தெருக்களுக்கு புதிதாக ரோடுகள் போட வேண்டும். தெருக்களில் பெயர்ந்துள்ள பேவர் பிளாக் கற்களை சீரமைக்க வேண்டும். புதர் மண்டிய சாக்கடை ஜோதிலட்சுமி, குடும்பத்தலைவி, தும்மிச்சம்பட்டி: சாக்கடை வசதியை மேம்படுத்தி கழிவு நீர் தேங்காமல் செல்லும் வகையில் அமைக்க வேண்டும். சாக்கடைகள் புதர் மண்டி கிடப்பதால் அடிக்கடி துார்வாரி சுத்தம் செய்து கொசு மருந்து அடிக்க வேண்டும். தேவைப்படும் இடங்களில் தெரு விளக்குகள் அமைக்க வேண்டும். கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் தேவி, கவுன்சிலர் (தி.மு.க.,): அனைத்து இடங்களிலும் சாக்கடை அமைக்கப்பட்டு ரோடுகள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். வார்டில் பல பணிகளை செய்வதற்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. தெருக்களில் புதிதாக சிமென்ட் ரோடுகள் அமைக்கப்பட உள்ளது. வீடுகளுக்கு வினியோகம் செய்யப்படும் குடிநீர் போதுமானதாக உள்ளது.பேவர் பிளாக் கற்கள் பதிக்கப்பட்டுள்ளது. வார்டில் உள்ள தகுதிவாய்ந்த 100 க்கு மேற்பட்ட முதியோர்களுக்கு உதவித்தொகை கிடைக்க உதவி உள்ளேன். மாற்றுத்திறனாளிகளுக்கு உதவித்தொகை கிடைக்க ஏற்பாடு செய்துள்ளேன். பட்டா இல்லாதவர்களுக்கு பட்டா கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.