உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / ஆக்கிரமிப்பால் அல்லல், சாக்கடை சேதத்தால் அவதி பரிதவிப்பில் பழநி 17வது வார்டு மக்கள்

ஆக்கிரமிப்பால் அல்லல், சாக்கடை சேதத்தால் அவதி பரிதவிப்பில் பழநி 17வது வார்டு மக்கள்

பழநி: ஆக்கிரமிப்பால் அல்லல், சாக்கடை சேதத்தால் அவதி என பழநி நகராட்சி 17வது வாரடு மக்கள் தவியாய் தவிக்கின்றனர். அண்ணா நகர், திருவள்ளுவர் சாலை, ஆர்.ஏப்.ரோடு உள்ளடக்கிய இந்த வார்டில் மாவட்ட கல்வி அலுவலகங்கள், மருத்துவமனைகள் எம்.எல்.ஏ., அலுவலகம், கல்யாண மண்டபம் வணிக வளாகங்கள், உள்ளூர் மக்கள் மட்டுமின்றி வெளியூர், சுற்றுப்புற கிராம மக்கள் அதிக அளவில் பயன்படுத்தும் பகுதியாக உள்ளது. நகரின் முக்கிய பகுதியாக இருப்பதால் குடிநீர், குப்பை அகற்றுதல் முறையாக நடைபெற்று வருகிறது. வார்டை இணைக்கும் முக்கிய வழி பாதைகளான கல்லறை தோட்டம் பின்பகுதியில் உள்ள நகராட்சி சாலையில் ஆக்கிரமிப்பு அதிகமாக உள்ளது. இதனால் மக்கள் இப்பகுதியில் நடமாட சிரமப்படுகின்றனர். சாக்கடைகளை சரி செய்யுங்க ராமசாமி, ஓய்வு மின் அதிகாரி, சண்முகபுரம்: எங்கள் பகுதியில் சாக்கடை சேதமடைந்துள்ளது. இதனால் சிறிதளவு மழை பெய்தாலும் சாலையில் கழிவு நீருடன் மழை நீர் செல்கிறது. இதனால் நோய் தொற்று அபாயம் ஏற்படுகிறது. வீட்டிற்குள்ளும் கழிவு நீருடன் தண்ணீர் வருகிறது. மழை நீர் வடிகால் அமைத்து சேதமடைந்துள்ள சாக்கடைகளையும் சரி செய்ய வேண்டும். ஆக்கிரமிப்பால் அவதி பிரேம்குமார், வியாபாரி, அண்ணா நகர்: எங்கள் பகுதியில் கல்வி அதிகாரி அலுவலகம் உள்ளது. இங்கு போக்குவரத்து இடையூறு ஏற்படுத்தும் வகையில் வாகனங்களை நிறுத்தி செல்கின்றனர். கல்லறை தோட்டம் பின்புறம் உள்ள நகராட்சி சாலையில் ஆக்கிரமிப்புகள் அதிகரித்து வருகின்றன. இதனால் சாலையில் இருசக்கர வாகனத்தில் செல்ல கூட சிரமம் ஏற்படுகிறது. இதனை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். விரைவில் நடவடிக்கை செபாஸ்டின், கவுன்சிலர் (தி.மு.க.,): மக்கள் குறைகள் அனைத்தும் உடனடியாக சரி செய்யப்படுகிறது. அங்கன்வாடி மையம் கட்டப்பட்டுள்ளது. ரேஷன் கடை கட்டப்பட்டு வருகிறது. பாதாள சாக்கடை திட்டங்களுக்கான பணிகள் நடைபெற்று வருவதால் சிறு இடையூறுகள் ஏற்படுகின்றன. சாக்கடை கட்ட நகராட்சி கூட்டத்தில் எடுத்துக்கூறி சரிசெய்ய நடவடிக்கை எடுக்கப்படும். ஆக்கிரமிப்பு அகற்ற விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்