உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / எங்கும் கழிவுநீர் தேக்கம்; ரேஷன் கடைக்கு இல்லை கட்டடம் பிரச்னைகளின் பிடியில் ஒட்டன்சத்திரம் 13 வது வார்டு

எங்கும் கழிவுநீர் தேக்கம்; ரேஷன் கடைக்கு இல்லை கட்டடம் பிரச்னைகளின் பிடியில் ஒட்டன்சத்திரம் 13 வது வார்டு

ஒட்டன்சத்திரம் : குறுகலான வாய்க்காலால் கழிவுநீர் தேக்கம், ரேஷன்கடைக்கு சொந்த கட்டடம் இல்லாததது என ஒட்டன்சத்திரம் நகராட்சி 13வது வார்டு மக்கள் பரிவிக்கின்றனர்.மேட்டுப்பட்டி, தும்மிச்சம்பட்டி, முத்தாலம்மன் கோயில் தெரு பகுதிகள் உள்ளடக்கிய இந்த வார்டில் மேட்டுப்பட்டி தெற்குப் பகுதியில் குடியிருப்புகள் அதிகரித்து வருகின்றன. ரோடு வசதி இல்லாமல் மழை காலத்தில் வெளியே சென்றுவர சிரமமாக இருந்து வந்தது. தற்போது இப்பகுதியில் வடிகால் வசதியுடன் ரோடு அமைக்கும் பணி முடிந்துள்ளது. மேட்டுப்பட்டி வையாபுரி லைன் பகுதியில் மழை காலத்தில் தண்ணீர் தேங்குவதால் மக்களுக்கு சிரமம் ஏற்படுகிறது. தண்ணீர் தேங்காமல் இருக்க இங்கு உள்ள சிறு பாலத்தை பெரிதாகக் கட்ட வேண்டும். முத்தாலம்மன் கோயில் பகுதியில் மக்கள் நடமாட்டம் அதிகம் என்பதால் உயர்மின் கோபுர விளக்கு அமைக்க வேண்டும். கோடை காலம் துவங்கி உள்ளதால் குடிநீர் தவிர்த்து பிற தேவைகளுக்கு இன்னும் போதுமான தண்ணீர் வழங்க வேண்டும். தெரு விளக்குகளை இன்னும் அதிகப்படுத்த வேண்டும். ரேஷன் கடை, அங்கன்வாடிக்கு சொந்த கட்டடம் இல்லாத நிலை உள்ளது. வார்டில் உள்ள ஆதரவற்ற ,தகுதியான முதியோர்கள் அனைவருக்கும் அரசு உதவி தொகை பெற்று தர வேண்டும். தும்மிச்சம்பட்டி பகுதியில் படிக்கும் மாணவர்களின் நீண்ட நாள் கோரிக்கையான நூலகம் அமைக்க ஏற்பாடு செய்ய வேண்டும்.

சாக்கடையை துார்வாருங்க

ஆனந்தன், பா.ஜ., நகர செயலாளர்: மேட்டுப்பட்டி மெயின் ரோட்டில் வடிகால் சிறிதாக இருப்பதால் மழைக்காலத்தில் தண்ணீர் தேங்குகிறது. இப்பகுதியில் சிறு பாலம் அமைத்து கழிவு நீர் வசதியை மேம்படுத்த வேண்டும். சாக்கடையை அடிக்கடி தூர்வார வேண்டும். இப்பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். இன்னும் அதிகப்படியான தெரு விளக்குகள் அமைக்க வேண்டும்.

தாங்க முடியல கொசு தொல்லை

காமாட்சி ராஜா, அ.தி.மு.க., தகவல் தொழில்நுட்ப பிரிவு நகரச் செயலாளர்: இப்பகுதியில் படித்த இளைஞர்கள் அதிகம் உள்ளனர். இவர்களின் நீண்ட நாள் கோரிக்கையான நுாலக வசதியை ஏற்படுத்தி தர வேண்டும். தெருக்களில் பேவர் பிளாக் கற்கள் அமைக்க வேண்டும். கொசுத்தொல்லை அதிகமாக உள்ளது. நல்ல தண்ணீர் குழாய்கள் பல இடங்களில் உடைந்து தண்ணீர் வீணாகிறது.

கோரிக்கைகள் நிறைவேற்றம்

கண்ணன், கவுன்சிலர் (தி.மு.க.,): மேட்டுப்பட்டி தெற்கு பகுதியில் அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும் என உணவுத்துறை அமைச்சரிடம் கோரிக்கை வைத்தேன். அதன் பயனாக தற்போது இப்பகுதியில் வடிகால் , ரோடு , தெரு விளக்கு , குடிநீர் வசதி செய்து தருவதற்கான பணிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன.ரேஷன் கடை, அங்கன்வாடிக்கு சொந்த கட்டடம் கட்டுவதற்கு நிலம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. விரைவில் சொந்த கட்டடம் கட்டப்படும். முத்தாலம்மன் கோவில் தெரு பகுதியில் வடிகால் வசதி ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். வையாபுரி லைன் பின்புறம் வடிகால், மேட்டுப்பட்டி மெயின் ரோட்டில் சிறு பாலம் கட்டப்பட உள்ளது. பொதுமக்களின் கோரிக்கைகள் அனைத்தும் விரைந்து நிறைவேற்றப்பட்டு வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ