குளம் உடைந்ததில் மூங்கில் பள்ளம் கிராமத்தில் புகுந்த வெள்ளம் ஒரு வாரமான நிலையிலும் அரசு துறை அதிகாரிகள் செல்லாத துயரம்
கொடைக்கானல்: திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் கீழானவயல் புலி பிடித்தான் கானல் குளம் உடைந்து மூங்கில் கிராமத்தில் வெள்ளம் புகுந்ததில் விவசாய நிலம், ஆடு, வீடுகள் சேதமடைந்துள்ளது.இது நடந்து ஒரு வாரமாகியும் அதிகாரிகள் பார்வையிடாத நிலையில் இங்கு வாழும் மலைவாழ் மக்கள் அவதிக்குள்ளாகி உள்ளனர்.கொடைக்கானல் மன்னவனுார் ஊராட்சி கீழானவயல் புலி பிடித்தான் கானல் குளம் கனமழையின் போது ஓரு வாரம் முன்பு உடைந்தது.இதன் தண்ணீர் மூங்கில் பள்ளம் கிராமத்தை சூழ்ந்தது. இதில் வீடு, ஆடு , வளர்ப்பு பிராணிகள், வன விளை பொருட்கள் நீரில் அடித்து செல்லப்பட்டது.அடிப்படை வசதிகள் இல்லாத மலைவாழ் கிராமத்திற்கு வனத்துறை , தன்னார்வ அமைப்புகள் சூரிய மின்விளக்கு, தற்காலிக குடிநீர் இணைப்பு வழங்கி உள்ளது.ஊராட்சி சார்பில் கிராமத்திற்கு எவ்வித அடிப்படை வசதிகளும் நிறைவேற்றப்படாது நிலையில் இங்கு வாழும் 30க்கு மேற்பட்ட கிராமத்தினர் பழங்கால நடைமுறையிலே இதுவரை வாழ்ந்து வருகின்றனர்.இவர்களது அடிப்படை பிரச்னைகள் குறித்து கோரிக்கை விடுத்தும் அதிகாரிகள் செவி சாய்க்காத நிலை உள்ளது. மலைவாழ் மக்களோ கற்கால முறையில் தங்கள் வாழ்க்கை முறையை நடத்தி வருகின்றனர். போக்குவரத்து இல்லாத ஒத்தையடி பாதை வழியாக அருகில் உள்ள மன்னவனுாருக்கு 14 கி.மீ., நடை பயணமாக சென்று அத்தியாவசிய பொருட்களை பெறும் நிலை உள்ளது. தற்போது இக்குளம் உடைந்ததால் இவர்கள் நடைபாதைக்கு பயன்படுத்திய ஒத்தையடி பாதைகள் , குடிநீர் குழாய்களும் நீரில் அடித்து செல்லப்பட்டன. 20க்கு மேற்பட்ட ஆடுகள் தண்ணீரில் அடித்து செல்லப்பட்டதில் வாழ்வாதாரம் பாதித்துள்ளனர். பிரம்பு வீடு, குடிசை வீடுகளில் வசிக்கும் இவர்கள் வீடுகளும் சேதமடைந்துள்ளது. குளம் உடைந்து ஒரு வாரம் ஆகிய நிலையில் இப்பகுதி மக்களின் பிரச்னைகள் குறித்து அரசுத்துறை அதிகாரிகள் எதையும் கண்டுக்காததால் இப்பகுதி மக்கள் ஆதங்கத்தில் உள்ளனர்.காளியம்மாள், கூலித்தொழிலாளி : கீழானவயல் குளம் உடைந்து ஒரு வாரம் ஆன நிலையில் அதிகாரிகள் தங்கள் மலைவாழ் கிராம சேதத்தை பார்வையிட வரவில்லை. தனி தீவு போல் துண்டிக்கப்பட்டு பாதிக்கப்பட்டுள்ளோம் என்றார் .உமா, கூலித்தொழிலாளி: மலைவாழ் மக்களான நாங்கள் வனப்பகுதியில் சேகரிக்கப்படும் வன விளைபொருட்களை வாழ்வாதாரத்துக்காக சேகரித்து வைத்திருந்தோம். திடீரென குளம் உடைந்து அனைத்து பொருட்களும் அடித்து செல்ல பாதிக்கப்பட்டுள்ளோம். அத்தியாவசிய தேவைகளுக்காக மன்னவனுார் செல்லும் பாதை அடித்து செல்லப்பட்டதால் தவித்து வருகிறோம். வருவாய் துறை நிலத்தில் சிறு விவசாயம் செய்து வந்த நிலையில் அந்நிலங்களும் அடித்துச் செல்லப்பட்டுள்ளது என்றார்.வீரம்மாள், கூலித்தொழிலாளி : இதுவரை தங்களது கிராமத்திற்கு மின்சார வசதி அறவே இல்லை. வனத்துறையினர், தன்னார்வ அமைப்பினர் சூரிய மின்விளக்குகளை அமைத்துக் கொடுத்தனர். குழாய்களை அடித்து சென்றதால் குடிநீர் தேவைக்கு அவதிப்படுகிறோம். தற்போது குளம் உடைந்து தனித்தீவு போல் கேட்பாரற்ற நிலையில் உள்ளோம். அதிகாரிகள் எங்களது நிலைகுறித்து ஆய்வு செய்ய கூட வராததால் பெரும் துயரத்தில் உள்ளோம் என்றார்.இங்கு வசிக்கும் மக்களுக்கு ஊராட்சி தரப்பில் இதுவரை எவ்வித அடிப்படை வசதிகளும் செய்து தராத நிலையில் இப்பகுதி மக்கள் துவக்கத்திலேயே தீவு போன்றுதான் வாழ்ந்து வந்தனர். தற்போது புலிப்பிடித்தான் கானல் குளம் உடைந்ததில் மேலும் பாதிக்கப்பட்டு அவதிக்குள்ளாகி உள்ளனர். இவர்களது பிரச்னையை மாவட்ட நிர்வாகம் துரிதமாக ஆய்வு செய்து பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.