கிடப்பில் மஞ்சப்பை திட்டம்; காட்சிப்பொருளான மெஷின்கள்
திண்டுக்கல்: எங்கும் பிளாஸ்டிக் பைகள் புழக்கத்தில் இருப்பதால் மஞ்சப்பை திட்டம் கிடப்பில் இருப்பதோடு இதன் மெஷின்கள் காட்சிப்பொருளாக மாறி வருகின்றன.சுற்றுச்சூழலை பாதிக்கும் 40 மைக்ரானுக்கு குறைவான பாலிதீன் பை, பிளாஸ்டிக் பொருட்களுக்கு 2019 முதல் தமிழக அரசு தடை விதித்தது. அதன்படி ஒருமுறை பயன்படுத்தி துாக்கி எறியக்கூடிய 14 வகையான பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்த தடை உள்ளது. இதற்கு மாற்றாக சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு இல்லாத பொருட்கள் பயன்பாட்டிற்கும் கொண்டு வரப்பட்டன.தி.மு.க., அரசு ஆட்சிக்கு வந்தபின் பிளாஸ்டிக் பைகளுக்கு மாற்றாக 'மீண்டும் மஞ்சப்பை' திட்டம் கொண்டு வரப்பட்டது.இதற்கு ஆரம்பத்தில் காட்டப்பட்ட ஆர்வம் தற்போது இல்லை. ஓட்டல்கள், மளிகை, தெருவோர கடைகளில் பிளாஸ்டிக் பயன்பாடு அதிகரித்துள்ளது. புற்றுநோய் பாதிப்பை ஏற்படுத்தும் டீ கப், உணவுக்கு பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் தாள் அனைத்து பகுதிகளிலும் உள்ளன. அரசு செயல்படுத்தினாலும் அதற்கான கட்டுப்பாடுகளோ, போதிய விழிப்புணர்வு இல்லாததால் மஞ்சப்பை திட்டம் கிடப்பில் போய்விட்டது.இதற்காக மாவட்டங்களில் கலெக்டர் அலுவலகம் தொடங்கி பஸ் ஸ்டாண்ட் வரை பெரும்பாலான இடங்களில் வைக்கப்பட்டுள்ள ரூ.10 நாணயம் செலுத்தி பயன்பாட்டிற்கு எடுக்கப்படும் மஞ்சள் பை மெஷின்கள் காட்சிப் பொருளாக உள்ள நிலையில் அரசு பணமும் வீணாகிறது. போதிய விழிப்புணர்வு ஏற்படுத்தி மஞ்சப் பை திட்டத்தை முறையாக பயன்படுத்தினால் பிளாஸ்டிக் பயன்பாட்டினை தவிர்த்து சுற்றுச்சூழல் மாசுபடுவதை தவிர்க்க முடியும்.