முறையாக நடக்கல பேட்ஜ் ஒர்க் பணிகள் பழநி நகராட்சி 25வது வார்டு மக்கள் அவதி
பழநி: சூளைமேட்டு தெரு, தம்புரான் தோட்டம், கோட்டைமேட்டு தெரு, அன்சாரி தெரு, எருமைகார தெரு, காமராஜர் வீதி, காந்தி மார்க்கெட் ரோடு, பட்டத்து விநாயகர் கோவில் ரோடு உள்ளடக்கிய பழநி நகராட்சி 25வது வார்டில் சாலைகள் முறையாக சரி செய்யப்படாததால் பொதுமக்கள் சிரமப்படுகின்றனர். வார்டு முழுவதும் நாய் தொல்லையால் மக்கள் பரிதவிக்கின்றனர். சாலைகள் பேட்ஜ் ஒர்க் முறையாக செய்யாததால் மேலும் சேதமடைந்துவருகிறது .இதனை முறையாக சீரமைக்க நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். சாலை சேதம்
ஆனந்த்,பொறியாளர் : ஆரம்ப சுகாதார நிலையம் அருகே உள்ள வாகன நிறுத்துமிடத்தில் பேவர் பிளாக் கற்கள் புதிதாக போடப்படாமல் பழைய கற்களை பயன்படுத்தி வேலை பார்த்துள்ளனர். சூளைமேட்டு தெரு சாலைகள் சேதமடைந்தும் சரி செய்யாமல் விட்டுள்ளனர். குழாய் சேதம்
நாகூர் மீரான், வியாபாரி : பட்டத்து விநாயகர் கோயில் ரோடு பேட்ஜ் ஒர்க் சரியாக செய்யவில்லை. சிமென்ட் கலவைகள் பெயர்ந்து வருகின்றன. மேலும் பட்டத்து விநாயகர் கோயில் சாலையில் குடிநீர் குழாய் சேதமடைந்து தண்ணீர் வீணாகி வருகிறது. தேவை தரைப்பாலம்
காமாட்சி, கறிக்கடை உரிமையாளர் : குளத்துரோடு பகுதியில் இருந்து படிப்பாறை காளியம்மன் கோயில் வரை தரைப்பாலம் அமைத்து தர வேண்டும். இதன் மூலம் ஐந்து வார்டு மக்கள் பஸ் ஸ்டாண்ட் செல்வதற்கும் பழநி மக்கள் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு செல்லவும் ஏதுவாக இருக்கும்.இதனை நடைமுறைப்படுத்த வேண்டும். வருவாய் இழப்பு
ஜன்னத்துல் பீர்தவுஸ், கவுன்சிலர் (அ.தி.மு.க.,): பொதுமக்கள் நலன் சார்ந்த பிரச்னைகளை நகராட்சியில் கூறினால் நிதி இல்லை என்ற காரணம் கூறப்படுகிறது. நகராட்சிக்கு சொந்தமான ஏல இனங்கள் முறையாக ஏலம் விடுவதில்லை. முறையாக ஏலம் விடாததால் நகராட்சிக்கு வருவாய் இழப்பு ஏற்படுகிறது. நிதி பற்றாக்குறையும் ஏற்படுகிறது. மக்களுக்கு தேவையான பணிகளை செய்ய முடிவதில்லை என்றார்.