உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / திருமலை நாயக்கர் காலத்து செப்பேடு பழநியில் கண்டெடுப்பு

திருமலை நாயக்கர் காலத்து செப்பேடு பழநியில் கண்டெடுப்பு

பழநி: பழநியை சேர்ந்த கனகராஜ் குடும்பத்தினரிடம் இருந்த திருமலை நாயக்கரின் செப்பேடு கண்டெடுக்க தொல்லியல் ஆய்வாளர் நாராயணமூர்த்தி ஆய்வு செய்தார்நாராயணமூர்த்தி கூறியதாவது : திருமலை நாயக்கரின் செப்பேடு 1500 கிராம் எடை,29.5 செ.மீ., உயரம், 46 செ.மீ., அகலம் உடையது. செப்பேட்டின் முகப்பில் மயில் மேல் அமர்ந்த நிலையில் முருகனும், இடதுபுரம் திருமலை நாயக்கர், வலது புரம் சஞ்சீவி மூலிகை எடுத்து வரும் அனுமனும் உருவங்களாக வரையப்பட்டுள்ளன. செப்பேட்டின் இரு புறமும் 138 வரிகளில் பொறிக்கப்பட்டுள்ளது. செப்பேடு வழக்கமாக இடம்பெறும் வைகை நீடுக எனும் பாடலுடன் தொடங்குகிறது. அதன் பின் மூன்று பாடல்கள் முருகனின் புகழ் பாடப்படுகிறது. விஜயநகர அரசர்கள் மதுரை நாயக்க மன்னர்கள் பற்றிய பட்டியல் கூறப்படுகிறது. பட்டியல் இறுதியில் திருமலை நாயக்கரின், புகழ், விருது, பெயர்கள் இடம் பெற்றுள்ளது. இதை அடுத்து கன்னடிய தேசம் உள்ளிட்ட ஏழு தேசங்களின் கர்த்தாக்கள், திருமலை நாயக்கர், கோத்திரத்தார், 24 மனையார், சவளம் அஞ்சு, சாலிமூலசமூகம், 96 வலங்கை சாதியினர் ஆகியோர் பழநியில் கூடி ,பங்குனி உத்திர பவுர்ணமி அன்று ஸ்தானம் சின்னோப நாயக்கர், புலிப்பாணி தவராசா பண்டிதர் ஆகியோர் முன்னிலையில் பட்டயத்தை எழுதியதாக குறிப்பிடப்பட்டுள்ளது. லட்சுமி நாராயண பெருமாள் கோயிலுக்கு எதிரே தர்ம மடவாலயம் , அதில் நந்தா தீபம் ஏற்றுவதற்கும் பழநி பங்குனி உத்திர திருவிழாவில் எட்டாம் நாளில் மடத்தில் மண்டகப்படி நடத்த, முருகனுக்கு திருமஞ்சனம் திருகண், துவாக்காலுக்கும் தங்களுடைய வரி வசூல் செய்த செய்தியை கூறுகிறது ஆண்டுக்கு தலைகட்டுக்கு ஒரு பணமும், கல்யாணத்திற்கு பெண், மாப்பிள்ளை வீட்டார் தல இரண்டு பணமும், திரட்டிக்கு இரண்டு, சீமந்தத்திற்கு ஒரு பணமும் , ஈயக்கடை, உத்திராட்ச கடை, ஓலை கடை வெண்கல கடை உள்ளிட்ட கடைகளுக்கு வரி பணம் வசூலிப்பது பற்றியும் விரிவாக கூறுகிறது. வரியே கொடுக்காத பெயர்களுக்கு சாபமும், தர்மத்திற்கு உபகாரம் செய்தவர்களுக்கு பலனையும் செப்பேடு விரிவாக கூறுகிறது. செப்பேடு இதை எழுதிய பழனியப்பன் செப்பேடு கோபால் உடையார் மகன் முத்துலிங்க உடையார் வசம் வழங்கப்பட்டுள்ளது. எனவே இவர் வசூல் செய்யும் அதிகாரம் பெற்றவர் ஆகிறார் என கருதலாம். இறுதியாக தர்மமே செய்யும் என எழுதப்பட்டு செப்பேடு முடிகிறது. இதில் உள்ள குறிப்புகளின் அடிப்படையில் செப்பேடு திருமலை நாயக்கரின் 12 ஆம் ஆட்சி ஆண்டில் அவரது 51 வது வயதில் பழநி வருகையின் போது 1635 ஏப் ,1 ல் எழுதப்பட்டுள்ளது என தெரிகிறது என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை