தொடர் விடுமுறையால் ரயில் சேவை மாற்றங்கள் ரத்து
வடமதுரை:ரயில் பாதை பராமரிப்பு காரணங்களுக்காக டிச.27 துவங்கி ஜன.3 வரையிலான காலத்தில் ஏற்கனவே திட்டமிட்டு அறிவிக்கப்பட்டிருந்த ரயில் சேவை மாற்றங்களை கிறிஸ்துமஸ், புத்தாண்டு, பள்ளி அரையாண்டு தேர்வு விடுமுறைகளை கருத்தில் கொண்டு ரயில்வே நிர்வாகம் ரத்து செய்துள்ளது.டிச.27 துவங்கி ஜன.3 வரையிலான காலத்தில் செங்கோட்டை மயிலாடுதுறை முன்பதிவில்லா விரைவு ரயில், ஹவுரா எக்ஸ்பிரஸ், குருவாயூர் - சென்னை எக்ஸ்பிரஸ், நாகர்கோயில்- கட்சேகுடா எக்ஸ்பிரஸ், நாகர்கோவில் - கோயம்புத்துார் எக்ஸ்பிரஸ், சென்னை- மதுரை தேஜஸ் எக்ஸ்பிரஸ், செங்கோட்டை - ஈரோடு முன்பதிவில்லா எக்ஸ்பிரஸ் ரயில்களுக்கு வழித்தட மாற்றம், பகுதியாக ரத்து போன்றவை அறிவிக்கப்பட்டிருந்தன. ஆனால் தொடர் விடுமுறை காரணமாக இந்த ரயில்கள் அனைத்தும் வழக்கம் போல வழக்கமான தடத்தில் இயக்கப்படும் என ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.