உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / வரம்பு மீறும் கல்குவாரிகள்; அதிக வெடிமருந்துகள் பயன்பாடால் அதிர்வு

வரம்பு மீறும் கல்குவாரிகள்; அதிக வெடிமருந்துகள் பயன்பாடால் அதிர்வு

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டத்தில் வரம்பு மீறி பாதுகாப்புமின்றி செயல்படும் கல்குவாரிகளில் அதிகளவில் வெடிமருந்துகள் பயன்படுத்துவதால் நில அதிர்வு ஏற்படுவதோடு அருகில் உள்ள குடியிருப்புகளில் விரிசலும் ஏற்படுகிறது . இதன் மீது அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.மாவட்டத்தில் அதிகளவில் கல் குவாரிகள் செயல்பட்டு வருகின்றன. இந்த குவாரிகளில் அனுமதிக்கப்பட்ட அளவை தாண்டி விடிய, விடிய பாறைகளை உடைத்து கடத்துவது தொடர்கிறது. பாறைகளை மிதமிஞ்சி உடைக்க குறிப்பிட்ட அளவைவிட அதிக அளவிலான வெடிமருந்துகள் பயன்படுத்தப்படுவதால் நில அதிர்வால் வீடுகளில் விரிசல் ஏற்படுவதாக பல்வேறு தரப்பினரும் புகார் தெரிவிக்கின்றனர். கேரளத்தில் மலைகளில் குவாரிகள் அமைக்க தடை அமலில் உள்ளது. இதனால் தமிழகத்திலிருந்து முறைகேடாக டன் கணக்கில் பாறைகளை கேரளத்துக்கு கடத்துவதால் தமிழகத்தில் பலருக்கு செல்வம் கொழிக்கும் தொழிலாக உள்ளது. இவற்றை தடுக்க நியமிக்கப்பட்ட அதிகாரிகள் கடத்தலுக்கு உடந்தையாக இருப்பதாக சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.மாவட்டத்தில் உள்ள கல்குவாரிகள் ஒவ்வொன்றிலும் குறிப்பிட்ட அளவிற்கு மேல் 200 அடி வரை பாறைகளை எடுக்க குழி தோண்டி உள்ளனர். விவசாயம் அதிகம் உள்ள இம்மாவட்டத்தில் கல்குவாரிகள் அதிகரித்து வருவதால் விவசாயமும் பாழாகி வருகிறது.குவாரிகளில் சிறியது முதல் பெரிய அளவிலான விபத்துக்களும் அவ்வப்போது ஏற்படுகின்றன. பெரிய அளவில் நிகழும் போது வெளியில் தெரிகிறது. மற்ற நேரங்களில் தெரிவதில்லை. தொழிலாளர்கள் விபத்தில் சிக்கும் போது குவாரி உரிமையாளர்கள் இதில் தனக்கு எந்த பங்கும் இல்லை என ஒதுங்கிக் கொள்ளும் சூழலும் உள்ளது. கல்குவாரி ஒப்பந்தம், உரிமம் பெற்றவர், வெடிவைப்பவர், கற்களை வெட்டி எடுப்பவர், மேற்பரப்புக்கு கொண்டுவருபவர், வாகனம் இயக்குபவர், தொழிலாளர்கள் ஒப்பந்ததாரர் என தனித்தனியாக ஒப்பந்தம் கொடுத்துவிடுவதால் தொழிலாளர்களுக்கும் குவாரி உரிமம் பெற்றவருக்கும் எந்த சம்பந்தமும் இல்லாமல் உள்ளது. இந்த நிலையை மாற்ற வேண்டும். உயிரை பணயம் வைத்து கல் உடைக்கும் தொழிலாளர்கள் வாழ்வாதாரத்தை காப்பதோடு ,வரம்புக்கு மீறி செயல்படும் கல்குவாரிகளில் அதிகாரிகள் ஆய்வு செய்து குவாரிகளை முறைப்படுத்த வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை