கொடைக்கானலில் டிராவல்ஸ் பஸ்களால் போக்குவரத்து இடையூறு
கொடைக்கானல் : கொடைக்கானலில் போக்குவரத்திற்க்கு இடையூறாக டிராவல்ஸ் பஸ்கள் நிறுத்தும் போக்கை போலீசார் கண்டுகொள்வதில்லை. இதனால் சுற்றுலா பயணிகள் பெரும் அவதியை சந்திக்கின்றனர்.கொடைக்கானலில் தொடரும் போக்குவரத்து நெரிசலை சீர் செய்ய போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு வருகிறது. இருந்த போதும் கோக்கர்ஸ்வாக் , கிளப் ரோடு, செவன் ரோடு ஏரி சாலை பகுதிகளில் தொடர்ந்து போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதை சீர் செய்ய போலீசார் எவ்வித நடவடிக்கையும் எடுப்பதில்லை. இதற்கு காரணம் கிளப் ரோட்டில் இருபுறம் நிறுத்தப்படும் டிராவல் பஸ்கள்,உட்வில் ரோட்டில் நிறுத்தப்படும் கார்களே காரணமாக உள்ளது. சீசன்,தொடர் விடுமுறை காலங்களில் கொடைக்கானலில் போக்குவரத்து ஸ்தம்பிப்பது வாடிக்கையாக இருந்தது. இதை தவிர்க்க வன சுற்றுலா தலங்களுக்கு செல்லும் வாகனங்கள் பஸ்ஸ்டாண்ட், கோக்கர்ஸ்வாக் வழியாக திருப்பி விடப்பட்டது. இவை மீண்டும் ரோஜா பூங்கா வழியாக ஏரிச்சலையை வந்தடையும் படி போக்குவரத்து சீர் செய்யப்பட்டது. இதற்கிடையே ஒரு வழிப்பாதையான உட்வில் ரோட்டில் நிறுத்தப்படும் கார்கள்,வாகனங்கள் சகஜமாக செல்ல முடியாத நிலையால் போக்குவரத்து நெருக்கடி ஏற்படுகிறது. மாறாக நகர் பகுதிக்கு வருகை தரும் டிராவல்ஸ் பஸ்கள் துவக்கத்தில் பழைய அப்பர் லேக் ரோடு, கலையரங்கம், சலேத் மாதா கோயில் ரோட்டில் நிறுத்துவது என போலீசார் முடிவெடுத்து சில வாரங்கள் மட்டும் அங்கு நிறுத்தப்பட்டது. மீண்டும் டிராவல்ஸ் பஸ்கள் தங்களது வருவாய் பாதிப்பதாக கூறி மீண்டும் கிளப் ரோடு பகுதியில் பஸ்களை நிறுத்தும் போக்கை தொடர்ந்தனர். பஸ்ஸ்டாண்டிலிருந்து திரும்பிச் செல்லும் பஸ் உள்ளிட்ட வாகனங்கள் குறுகிய ரோட்டில் எளிதில் செல்ல முடியாத நிலையால் போக்குவரத்து ஸ்தம்பிக்கிறது. இதனால் மூஞ்சிக்கல் வரை வாகனங்கள் அணிவகுத்து நிற்கின்றன. போலீசார் இனியாவது டிராவல்ஸ் பஸ்களை கிளப் ரோட்டில் நிறுத்துவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.