பைக் - அரசு பஸ் மோதல் இரண்டு பேர் பரிதாப பலி
சாணார்பட்டி:அரசு பஸ் மோதியதில் டூ - வீலரில் வந்த இருவர் பலியாயினர். திண்டுக்கல் மாவட்டம், சாணார்பட்டி அருகே உள்ள பூவக்கிழவன்பட்டியை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன், 25. வடமதுரையில் உள்ள மில்லில் வேலை பார்த்து வந்த இவர், உறவினரான திருச்சி மாவட்டம் வையம்பட்டியை சேர்ந்த புவனேஸ்வரி, 21, என்பவருடன், நேற்று காலை டூ - வீலரில் திண்டுக்கல் சென்றார். இருவரும் ஹெல்மெட் அணியவில்லை. 7:30 மணிக்கு கோபால்பட்டி பெட்ரோல் பங்க் அருகே வந்தபோது, நத்தம் நோக்கி வந்த அரசு பஸ், இவர்களின் டூ - வீலரின் பின்பகுதியில் மோதியது. இதில் காயமடைந்த இருவரும் திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு செல்லும் வழியில் இறந்தனர். சாணார்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.