மாணவர்களுக்காக பஸ்சை சிறைபிடித்த கிராம மக்கள்
சாணார்பட்டி: சாணார்பட்டி அருகே வீரசின்னம்பட்டியில் அரசு டவுன் பஸ் காலதாமதமாக வந்ததால் பள்ளி மாணவர்கள் சிரமமடைந்த நிலையில் பஸ்சை கிராம பொதுமக்கள் சிறை பிடித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். திண்டுக்கல்லில் இருந்து சாணார்பட்டி வழியாக வீரசின்னம்பட்டிக்கு காலை நேரத்தில் அரசு பஸ் இயக்கப்படுகிறது. இந்த பஸ்சில் பள்ளி, கல்லுாரி மாணவர்கள்,கூலி வேலைக்கு செல்லும் பணியாளர்கள் என ஏராளமானவர்கள் தினமும் சென்று வருகின்றனர். ஒரு வாரமாக காலை 8:15 மணிக்கு வரக்கூடிய பஸ் 9:00 மணிக்கு வந்தது. இதனால் பள்ளி மாணவர்கள் பாதிக்கப்பட்டனர். இதையடுத்து நேற்றும் தாமதமாக 9:00 மணிக்கு வந்த அரசு பஸ்சை அப்பகுதி மக்கள் சிறைபிடித்தனர். இதையடுத்து சாணார்பட்டி எஸ்.ஐ., பொன் குணசேகர் தலைமையிலான போலீசார் போக்குவரத்து அதிகாரிகளிடம் காலை 8:15 மணிக்கு வழக்கம் போல் அரசு பஸ்சை இயக்க கூறினர். சரியான நேரத்தில் பஸ் இயக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளிக்க மக்கள் கலைந்து சென்றனர்.