துார்வாராத சாக்கடையால் ரோட்டில் ஓடும் கழிவு நீர்; சுகாதாரக்கேட்டில் கொடை 23 வது வார்டு
கொடைக்கானல்; சீனிவாசபுரம், ஏஐடியுசி நகர் பகுதிகளை உள்ளடக்கிய கொடைக்கானல் நகராட்சி 23 வது வார்டில் சரிவர எரியாத தெருவிளக்கு, சேதமடைந்த கான்கிரீட் ரோடு, தூர்வாராத சாக்கடையால் ரோட்டில் ஓடும் கழிவு நீரால் நோய் தொற்று , காட்டுமாடு, தெரு நாய்களின் அச்சுறுத்தலால் குடியிருப்புவாசிகள் அவதி என ஏராளமான பிரச்னைகள் உள்ளன. தடுமாறும் மக்கள்
ஜெய்கணேஷ் அ.தி.மு.க., பாசறை செயலாளர் : கழிப்பறை வசதியின்றி அவதியுறும் நிலை உள்ளது. சீனிவாசபுரம் பகுதி ரேஷன் கடை குறுக்கு ரோட்டில் படிக்கட்டு இன்றி பொதுமக்கள் , பள்ளி குழந்தைகள் நாள்தோறும் தடுமாறுகின்றனர். ரோட்டோரம் கட்டப்பட்டுள்ள தடுப்பு சுவர் முழுமை பெறாமல் விபத்து அபாயத்தில் உள்ளது. தற்போது அமைக்கப்பட்ட கான்கிரீட் ரோடுகள் சேதமடைந்துள்ளது. வார்டில் சமுதாயக்கூடம் கட்ட வேண்டும். தெருவிளக்குகள் எரிவதில்லை
கோபி, வணிகம்: சீனிவாசபுரம் மாரியம்மன் கோயில் பகுதியில் சிமென்ட் ரோடு சேதமடைந்துள்ளது. நிழற்குடை சேதமடைந்து சுகாதாரக்கேடாக உள்ளது. வாய்க்கால்கள் தூர்வாராமல் கழிவு நீர் ரோட்டில் செல்கிறது. புதிய வாய்க்கால் கட்ட வேண்டும். தாழ்வான பகுதியில் மழைநீர் செல்லும் பகுதி ஆக்கிரமிக்கப்பட்டு தண்ணீர் குடியிருப்பில் புகும் அபாயம் உள்ளது. தெருவிளக்குகள் சரிவர எரிவதில்லை. குப்பை அள்ளுவதில்லை
சதிஷ்குமார், பா.ஜ., முன்னாள் நகரத் தலைவர் : முத்துமாரியம்மன் கோயில் தெருவில் மழைநீர் செல்லும் 4 கால்வாய்கள் அடைத்துள்ளது. குப்பை சரிவர அள்ளுவதில்லை. குழந்தைகள் அங்கன்வாடி மையத்திற்கு செல்ல முடியாமல் இடிபாடுகள் குவிந்துள்ளன. ரோட்டில் நிறுத்தும் வாகனங்களால் அவசர காலத்தில் செல்ல முடியாத நிலை உள்ளது. தெருக்களில் ஆக்கிரமிப்புகள் அதிகரித்துள்ளன. மின்வயர்கள் தாழ்வாக சீரற்ற நிலையில் உள்ளது. நடவடிக்கை எடுக்கப்படும்
மரியபுஷ்பம், கவுன்சிலர் (தி.மு.க.,) : ரூ. 2.25 கோடியில் வளர்ச்சி பணிகள் செய்யப்பட்டுள்ளது. தற்போதுள்ள சுகாதார வளாகத்தை அகற்றி சமுதாயக் கூடம் கட்ட நடவடிக்கை எடுக்கப்படும். தெருநாய்களை கட்டுப்படுத்த நகராட்சி , காட்டு மாடுகளை கட்டுபடுத்த வனத்துறை மூலம் வலியுறுத்தப்பட்டு வருகிறது. புதிய வாய்க்கால் கட்டமைக்கப்படும் என்றார்.