பிளாஸ்டிக் குப்பையில் உணவு தேடும் வனவிலங்குகள் ஜீரண பிரச்னையால் பலியாகும் அவலம்
கொடைக்கானல் : திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மலைப்பகுதி வத்தலக்குண்டு ரோட்டில் குவிக்கப்பட்ட பிளாஸ்டிக், பாலிதீன் கழிவு குப்பையில் இரை தேடும் வனவிலங்குகள் பலியாகும் அவலம் உள்ளது. வத்தலக்குண்டு கொடைக்கானல் ரோட்டில் பெருமாள்மலை அருகே அடுக்கம் ஊராட்சியில் சேகரிக்கப்படும் குப்பைகள் இங்குள்ள கிடங்கில் குவிக்கப்படுகிறது. இதிலிருந்து வீசும் துர்நாற்றம் மற்றும் சுகாதாரக்சீர்கேடுகளால் கொடைக்கானலுக்கு வாகனங்களில் செல்லும் சுற்றுலா பயணிகள் முகம் சுளிக்கின்றனர். அருகில் உள்ள வனப்பகுதியிலிருந்து உணவுதேடி வெளியே வரும் காட்டுப்பன்றிகள், காட்டு மாடுகள், குரங்குகள், மான்கள் உள்ளிட்டவை இங்கு குவிக்கப்படும் பிளாஸ்டிக் குவியல்களிலிருந்து நாள்தோறும் உணவு தேடுகின்றன. குப்பை கழிவுகளிலிருந்து உணவு எடுத்து கொள்ளப்படும் வனவிலங்குகள் ஜீரண பிரச்னையால் பலியாகும் அவலம் உள்ளது. அடுக்கம் ஊராட்சியில் இருந்து சேகரிக்கப்படும் குப்பை கிடங்கில் கொட்டப்படும் இடத்தை சுற்றி சுவர், வேலி அமைத்து மக்கும், மக்காத குப்பையாக தரம் பிரித்து அப்புறப்படுத்த வேண்டும். துர்நாற்றம் இன்றி அந்த இடத்தை பராமரிக்க ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.