சிறுமலை பளியர் இன மக்களின் வாழ்வு மேம்படுமா?
திண்டுக்கல் : ஓட்டுரிமை,இலவச வீடுகள்,கல்வி,ரேஷன் உள்ளிட்ட வசதிகள் அரசு தரப்பில் செய்து கொடுத்த போதிலும் வெளிச்சத்திற்கு வர முடியாமல் இருளில் வாழும் திண்டுக்கல் சிறுமலை பளியர் இன மக்களின் வாழ்வு மேம்படுமா என சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.திண்டுக்கல் மாவட்டத்தில் கொடைக்கானலுக்கு அடுத்த படியாக சிறுமலையில் பழங்குடியின மக்கள் அதிகளவில் வாழ்கின்றனர். திண்டுக்கல் நகரிலிருந்து 20 கிலோ மீட்டர் துாரத்தில் உள்ள சிறுமலையில் பொன்னுருக்கி,தென்மலை உள்ளிட்ட பகுதிகளில் பளியர் இனத்தை சேர்ந்த 64 குடும்பத்தினர் வாழ்கின்றனர். இவர்கள் திருமணம் முதல் எந்த பழக்க வழக்கத்திற்காகவும் பிறரை நாடாமல் எல்லாவற்றிலும் தங்கள் இன மக்களையே சார்ந்து வாழ்கின்றனர்.அரசு தரப்பில் சிறுமலை தென்மலை பகுதியில் பளியர் இன மக்களில் 14 குடும்பத்தினருக்கு வீடுகள் கட்டித்தரப்பட்டுள்ளது. பொன்னுருக்கி பகுதியில் அவர்களுக்கென தனியாக நிலமும் ஒதுக்கப்பட்டுள்ளது. அதில் குடில்கள் அமைத்து வாழ்க்கை நடத்துகின்றனர். இவர்களுக்காக சிறுமலையில் அரசு நடுநிலைப்பள்ளியும் உள்ளது. ஆனால் 8ம் வகுப்பு படித்த பிறகு மேல் படிப்பிற்காக ஒருவர் கூட உயர்கல்விக்கு செல்லவில்லை என்பது வருத்தமான விஷயம். சுரண்டும் தரகர்கள்
இவர்களின் முழு நேர தொழில்களாக மலைப்பகுதிகளிலிருந்து கிடைக்கும் மருத்துவ குணம் நிறைந்த முடவாட்டு கிழங்கு,மலைத்தேன் சேகரிப்பதை கருதுகின்றனர். இதற்காக குழுவாக பிரிந்து அவர்கள் காட்டுக்குள் செல்கின்றனர்.அப்போது 5 நாட்கள் வரை குடியிருக்கும் பகுதிகளுக்கு வராமல் வனப்பகுதிகளுக்குள்ளேயே தங்களுக்கு தேவையான பொருட்களை தேடும் பணியில் ஈடுபடுகின்றனர். அதையும் நேரடியாக கடைகள்,பொது மக்களிடம் விற்பனை செய்வதற்கு இவர்கள் தயங்குவதால் அவர்களிடமிருந்து பொருட்களை பெற்று கொள்ளும் இடைத்தரகர்கள் குறைந்த தொகையை அவர்களிடம் கொடுத்து விட்டு அதிக விலைக்கு வெளியில் விற்கின்றனர்.இதன்மூலமும் இந்த இன மக்களின் உழைப்பு சுரண்டப்படுகிறது.சிறுமலை பளியர்களுக்கு ஓட்டுரிமை இருப்பதால் தேர்தல் சமயத்தில் அங்கிருக்கும் அரசியல் கட்சியினர் அவர்களை வனத்திற்குள் செல்ல விடாமல் தடுத்து உணவு கொடுத்து ஓட்டு செலுத்துவதற்காக கவனிக்கின்றனர். மற்ற நேரங்களில் அத்தி பூத்தது போல் அரிசி,பருப்பு போன்ற பொருட்களை தானமாக கொடுக்கின்றனர். அவர்களுக்கென ரேஷன் பொருட்கள் வழங்குவதற்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.ஆரம்ப காலக்கட்டத்தில் பளியர்கள் குகை போன்ற பகுதிகளில் வாழ்ந்ததால் இன்னும் 5 அடிக்கு குறையாமல் தான் உள்ளார்கள். இதுதவிர அங்கிருக்கும் எஸ்டேட்களிலும் தற்காலிகமாக இவர்கள் விவசாய பணிகளுக்கு செல்கின்றனர்.வீடு,ரேஷன்,ஆதார்,ஓட்டுரிமை உள்ளிட்ட ஜனநாயக உரிமைகள் கிடைக்கின்றபோதிலும் இன்னும் பளியர் இன மக்களின் வாழ்வு மேம்படுத்தபடாமல் இருப்பது வேதனைக்குரிய ஒன்றாக உள்ளது.பளியர்கள் சேகரிக்கும் முடவாட்டு கிழங்குகள்,மலைத்தேன் போன்ற பொருட்களை அவர்களே சந்தைப்படுத்த அரசு ஏற்பாடுகள் செய்ய வேண்டும்.கல்வியை மேம்படுத்த தன்னார்வலர்களை நியமிக்க வேண்டும். வனத்துறை நிர்வாகத்திற்குட்பட்ட சாதாரண பணிகளில் இவர்களை ஈடுபடுத்தலாம். இவர்களின் வாழ்வை மேம்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் தெரிவித்தனர்.