போதை வஸ்துகளால் தடம்மாறும் வாலிபர்கள் பாப்பம்பட்டி ஊராட்சியில் தேவை கண்காணிப்பு
பழநி : சேதமடைந்த ஆண்டிபட்டி செல்லும் சாலை,அதிவேகமாக செல்லும் மண் லாரிகளால் விபத்து, போதை வஸ்துகளால் தடம்மாறும் வாலிபர்கள் என பழநி பாப்பம்பட்டி ஊராட்சி மக்கள் பாதிக்கின்றனர்.குப்பம்பாளையம், பாப்பம்பட்டி,ஐவர்மலை உள்ளிட்ட பகுதிகளை உள்ளடக்கிய பாப்பம்பட்டி ஊராட்சி திருப்பூர் மாவட்ட எல்லை பகுதியில் உள்ளது.இங்கு போதை பொருள் விற்பனை அதிகரித்து வருகிறது. போதை வஸ்துகளால் வாலிபர்கள் தடமாறும் நிலையில் இதை கண்காணித்து தடுக்க வேண்டும் . பாப்பம்பட்டியில் இருந்து ஆண்டிபட்டி செல்லும் சாலையில் தண்ணீர் குளம்போல் தேங்கி உள்ளது. இதற்கு சரியான வடிகால் பகுதிகளை அமைத்து பாலம் அமைக்க வேண்டும். பஸ்கள் வருவதில்லை
ஜெகன், ஹிந்து முன்னணி மாநில நிர்வாக குழு உறுப்பினர், பாப்பம்பட்டி: குடிநீர் வழங்குவதில் சரியான வழிமுறையை கடைப்பிடிக்கவில்லை. குடிநீர் விநியோகிப்பதை கண்காணிக்க சரியான நபர்கள் இல்லை. எனது வீட்டிற்கு ஆறு மாதமாக குடிநீர் வராத நிலை உள்ளது. ஆண்டிபட்டி செல்லும் சாலையில் காலனி பகுதியில் தண்ணீர் தேங்கியுள்ளது. வாகனங்கள் இவ்வழியே செல்லும்போது வாகன ஓட்டிகள் சிரமம் அடைகின்றனர். இதனை சரி செய்து தர ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். மகளிர் இலவச பஸ் பாப்பம்பட்டி வராமல் கொழுமம் சாலையிலே செல்கிறது. பெண்கள் சிரமம் அடைகின்றனர். பெண்கள் நிற்கும் நிறுத்தங்களில் பஸ்சை நிறுத்தாமல் செல்கின்றனர். சிரமத்தில் பெண்கள், முதியவர்கள்
எல்லைதுரை, அ.தி.மு.க. கிளைச்செயலாளர், பாப்பம்பட்டி : எங்கள் பகுதியில் போதை வஸ்துகளின் விற்பனை அதிகரித்து வருகிறது. இளம் வயது வாலிபர்கள் பாதிக்கப்படுகின்றனர். அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் . எங்கள் பகுதியில் மண்வளம் பாதிக்கும் நிலையில் 15 க்கு மேற்பட்ட லாரிகளில் மண் அள்ளி செல்கின்றனர். பள்ளி செல்லும் குழந்தைகள் லாரிகளால் பாதிப்படைகின்றனர். கொழுமம் சாலையில் உள்ள மதுக்கடையில் வாங்கி பொது இடங்களில் அருந்துகின்றனர். குழந்தைகள், பெண்கள், முதியவர்கள் சிரமம் அடைகின்றனர். போதை வஸ்துகளை பயன்படுத்தும் நபர்கள் இரவு நேரங்களில் ஊராட்சி ஒன்றிய பள்ளியை பயன்படுத்தி வருகின்றனர் இதனை கட்டுப்படுத்த வேண்டும் என்றார்.