ஈரோடு: பெரியசேமூர் நகராட்சித் தலைவர் அறையில், முதல்வர் ஜெயலலிதா
ஃபோட்டோவை மாட்டிய அ.தி.மு.க.,வினருக்கும், அங்கு வந்த
தி.மு.க.,வினருக்கும் மோதல் ஏற்பட்டது.ஈரோடு அடுத்த பெரிய சேமூர்
நகராட்சித் தலைவராக தி.மு.க.,வைச் சேர்ந்த சுப்பிரமணியன் உள்ளார். நகராட்சி
அலுவலகத்தில் உள்ள அவரது அறையில் முன்னாள் முதல்வர் கருணாநிதி, ஸ்டாலின்
ஃபோட்டோக்கள் இருந்தன. முதல்வர் ஜெயலலிதா ஃபோட்டோவை அவர்
பொருத்தவில்லை.இதையறிந்த அ.தி.மு.க., எம்.ஜி.ஆர்., மன்ற மாவட்ட செயலாளர்
பழனிசாமி தலைமையில், நகரச் செயலாளர் சக்தி, மாவட்ட மகளிரணி செயலாளர்
மல்லிகா மற்றும் அ.தி.மு.க.,வினர், நேற்று காலை பெரியசேமூர் நகராட்சி
அலுவலகத்தில் திரண்டனர். அங்கு பூட்டியிருந்த தலைவர் அறையை நகராட்சி ஊழியர்
மூலம் திறக்க வைத்து, அறையினுள் நுழைந்து, அங்கிருந்த கருணாநிதி,
ஸ்டாலின், முன்னாள் அமைச்சர் ராஜா ஆகியோர் ஃபோட்டோக்களை அகற்றிவிட்டு,
முதல்வர் ஜெயலலிதா ஃபோட்டோவை மாட்டினர்.ஃபோட்டோவை மாட்டிவிட்டு, ஜெயலிதாவை
வாழ்த்தி கோஷம் எழுப்பியவாறு அ.தி.மு.க.,வினர் வெளியே வந்தனர். அப்போது,
நகராட்சித் தலைவர் சுப்பிரமணியன், கவுன்சிலர் பொன் பூபதி, தி.மு.க., நகரத்
துணைச் செயலாளர் ரவி உள்ளிட்ட தி.மு.க.,வினர் வந்தனர். அவர்கள் நகராட்சித்
தலைவர் அறைக்கு சென்று, கழற்றி வைத்த கருணாநிதி, ஸ்டாலின், ராஜா
ஃபோட்டோக்களை எடுத்துக் கொண்டு, நகராட்சி வளாகத்தில் உட்கார்ந்து தர்ணா
போராட்டம் நடத்தினர்.அப்போது, தி.மு.க.,வினர் ஜெயலலிதாவையும், அ.தி.மு.க.,
ஆட்சியையும் விமர்சித்து கோஷம் எழுப்பினர். இதைக்கேட்ட அ.தி.மு.க.,வினர்
தி.மு.க.,வினருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். கைகலப்பு உருவாகி
மோதல் முற்றும் நிலை ஏற்பட்டதால், போலீஸார் இருதரப்பினரையும் சமாதானம்
செய்தனர். நீண்ட நேரத்துக்குப் பின் அங்கியிருந்து அ.தி.மு.க.,வினர்
புறப்பட்டுச் சென்றனர். இச்சம்பவத்தால்,பெரியசேமூர் நகராட்சி அலுவலகத்தில்
பரபரப்பு ஏற்பட்டது.ஈரோடு மாநகராட்சி, வீரப்பன் சத்திரம் நகராட்சி
அலுவலகங்களில் இப்பிரச்னை எழுந்த போது, முதல்வர் ஜெயலலிதா படத்தின் கீழ்
அமர்ந்து பணிபுரிய விருப்பமில்லை எனக்கூறி, மாநகராட்சி மேயர் குமார்
முருகேஷ், சத்திரம் நகராட்சி தலைவர் மல்லிகா ஆகியோர் அமைதியாக தங்கள் அறையை
விட்டு வெளியேறி, வேறொரு அறையில் அமர்ந்து பணிபுரிகின்றனர். பெரியசேமூரில்
முதன்முதலாக மோதல் வெடித்துள்ளது.