அஞ்சலகங்களில் படிவமில்லாபரிவர்த்தனை அறிமுகம்
அஞ்சலகங்களில் படிவமில்லாபரிவர்த்தனை அறிமுகம்ஈரோடு:ஈரோடு, முதுநிலை அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் கோபாலன் வெளியிட்ட, செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:அஞ்சல் துறை மூலம் சிறுசேமிப்பு திட்டங்கள், சேவைகள் வழங்கப்படுகிறது. தற்போது தொழில் நுட்ப மேம்பாட்டை பயன்படுத்தி, படிவம் இன்றி எளிமையாக பரிவர்த்தனை மேற்கொள்ள, ஆதார் அடிப்படையிலான அங்கீகார செயல்முறை (e--KYC) பரிவர்த்தனை திட்டம் அறிமுகமாகி உள்ளது. அஞ்சலக கணக்கில் உள்ள தங்கள் ஆதார், மொபைல் எண், பான் கார்டு எண் போன்ற முக்கிய கே.ஒய்.சி., விபரங்களை பதிவு செய்து கொள்ளுதல், புதிய அஞ்சலக சேமிப்பு கணக்கு துவங்குதல், சேமிப்பு கணக்கில் பணம் செலுத்துதல், 5,000 ரூபாய் வரை பணம் எடுத்தல் போன்றவற்றை, இனி ஆதார் அடிப்படையில், படிவம் இன்றி கைரேகை மூலம் மேற்கொள்ளலாம்.இவ்வசதி, ஈரோடு கோட்டத்தில் உள்ள ஈரோடு, பவானி, கோபி தலைமை அஞ்சல் அலுவலகங்கள் மற்றும் அனைத்து துணை அஞ்சலகங்களிலும் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.இவ்வாறு தெரிவித்துள்ளார்.