| ADDED : ஆக 02, 2024 01:57 AM
புன்செய்புளியம்பட்டி, புன்செய்புளியம்பட்டி நகராட்சி சாதாரண கூட்டம், தலைவர் ஜனார்த்தனன் தலைமையில் நடந்தது. துணைத் தலைவர் சிதம்பரம், கமிஷனர் முகமது சம்சுதீன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் கவுன்சிலர்கள் பேசிய விபரம்;பூர்ண ராமச்சந்திரன், தி.மு.க.,; நகராட்சிக்கு சொந்தமான கடைகளை ஏலம் விடும்போது, ஏலம் எடுக்க வருபவர்களுக்கு முறையான விபரங்கள் கூறப்படுவதில்லை. உள் வாடகைக்கு விடப்பட்டுள்ள கடைகளை கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். புவனேஸ்வரி, அ.தி.மு.க.,; வாரச்சந்தை பகுதியில், இறந்த கால்நடைகளின் பாகங்களை வீசி செல்வதால் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. சுகாதார ஆய்வாளர்; வாரச்சந்தைக்கு கொண்டு வரப்படும் கால்நடைகளில், சிலது வாகனத்திலேயே இறந்து விடுவதால், அப்பகுதியில் வீசி செல்கின்றனர். அதை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.பரிமளம், தி.மு.க.,; அம்ருத் திட்டத்திற்காக, குடிநீர் குழாய் பதிக்க தோண்டப்பட்ட குழிகள் சரியாக மூடப்படவில்லை. பணி முடிக்கப்பட்ட இடங்களில் சாலை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். துணைத் தலைவர் சிதம்பரம்; நகராட்சிக்கு சொந்தமான கடைகளில், வாடகை பாக்கியை வசூல் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். பஸ் ஸ்டாண்ட் பகுதிகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்.இவ்வாறு விவாதம் நடந்தது.கூட்டத்தில், சாலையோர வியாபாரிகளுக்கான விற்பனை குழு தேர்வு செய்ய தேர்தல் நடத்துதல், புதிய வணிக வளாக கட்டடங்கள் கட்ட 'டிடிசிபி' அனுமதி பெற ஒப்புதல் பெறுதல் உள்ளிட்ட, 23 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.