உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / ஏ.டி.எம்., கார்டில் ரூ.30 ஆயிரம் அபேஷ் உதவி செய்து உருவிய ஆசாமி கைது

ஏ.டி.எம்., கார்டில் ரூ.30 ஆயிரம் அபேஷ் உதவி செய்து உருவிய ஆசாமி கைது

ஈரோடு, செப். 8-ஈரோடு, பெரியசேமூர், கருப்பராயன் கோவில் வீதியை சேர்ந்தவர் ராமசாமி, 55, சுமை துாக்கும் தொழிலாளி. கடந்த மாதம், 28ல் ஈரோடு கனிராவுத்தர் குளம் பகுதியில் உள்ள ஒரு ஏ.டி.எம்., மையத்துக்கு பணம் எடுக்க சென்றார். பணம் எடுக்க தெரியாததால், அருகில் இருந்த நபரிடம் கார்டை கொடுத்து, 1,500 ரூபாய் எடுத்து தருமாறு கேட்டுள்ளார். பணத்தை எடுத்து கொடுத்த ஆசாமி, அவரது ஏ.டி.எம்., கார்டை தராமல், வேறொரு கார்டை தந்துள்ளார். உதவி செய்த ஆசாமி களவாணி பயல் என்பதை அறியாமல், ராமசாமி அங்கிருந்து சென்று விட்டார். அவர் சென்றவுடன் உதவி செய்த மர்ம ஆசாமி, 30 ஆயிரம் ரூபாய் பணத்தை எடுத்துக் கொண்டான். இதையறிந்த ராமசாமி, வீரப்பன்சத்திரம் போலீசில் புகார் அளித்தார். மையத்தில் இருந்த சிசிடிவி கேமராவில் பதிவான உருவத்தை வைத்து, போலீசார் ஆசாமியை தேடி வந்தனர். இது தொடர்பாக நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு, குப்பண்டாபாளையத்தை சேர்ந்த பழனிசாமி மகன் செந்தில்குமார், 36, என்பவரை கைது செய்தனர். ஈரோடு சூரம்பட்டி நால்ரோடு அருகே அண்ணா நகரில் வசித்து வருவதும் தெரிந்தது. அவரிடம் இருந்து, 20 ஆயிரம் ரூபாயை பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி