| ADDED : ஜூலை 12, 2024 01:35 AM
வெள்ளகோவில், ஜூலை 12-வெள்ளகோவில் நகர் நடேசன் நகரில், 25 ஆண்டுகளுக்கு முன் அரசு சார்பில் வட்டரா வள மையம் கட்டப்பட்டது. இதில் மாற்றுத்திறன் மாணவர்களுக்கான பகல் நேர பராமரிப்பு மையம் செயல்பட்டு வருகிறது. கட்டப்பட்ட சில ஆண்டுகள் மட்டுமே குடிநீர் வந்த நிலையில், சாலை விரிவாக்க பணிக்காக இணைப்பை துண்டித்தனர். பின் மீண்டும் இணைப்பு வழங்காததால், 22 ஆண்டுகளாக குடிநீர் கிடைக்கவில்லை. தற்போது மையத்தில், 20 குழந்தைகள் பயின்று வரும் நிலையில், சமையல் பணி, குழந்தைகளுக்கு குடிநீர் உள்ளிட்டவைகளுக்கு குடிநீரின்றி சிரமப்பட்டு வந்தனர். இதுகுறித்து வட்டார வளமைய பணியாளர்கள், வெள்ளகோவில் நகராட்சி நிர்வாகத்திடம் கோரிக்கை வைத்தனர். நேற்று முன்தினம் வளமையத்தில் ஆய்வு மேற்கொண்ட நகராட்சி தலைவர் கனியரசி, நகராட்சி ஆணையர் வெங்கடேஸ்வரன் குடிநீர் இணைப்பு வழங்க உத்தரவிட்டனர். இதையடுத்து உடனடியாக குடிநீர் இணைப்பு கிடைத்தது. 22 ஆண்டுகளாக குடிநீர் இணைப்புக்கு போராடிய நிலையில், இரண்டே நாளில் குடிநீர் இணைப்பு வழங்கிய நகராட்சி தலைவர், ஆணையாளருக்கும், வளமைய ஊழியர்கள் நன்றி தெரிவித்தனர்.